பதிவுகள்

இன்று நாடளாவிய ரீதியில் அரச தாதியர் சங்கத்தினர்; 3 மணித்தியால பணிப்புறக்கணிப்பு !

சுகாதார ஊழியர்களுக்கான கொடுப்பனவு குறைப்பு தொடர்பில் அமைச்சர் எமக்கு வழங்கிய வாக்குறுதியை உடைதெறிந்துள்ளார். ஆகையால் திங்கட்கிழமை (17) அரச தாதியர் சங்கத்தினர் 3 மணித்தியாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அரச தாதியர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

தாதியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை (16) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய வரவு செலவு திட்டத்தில் சுகாதார ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்புக்கு இணையாக சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகள் என்பன குறைக்கப்பட்டுள்ளதுடன் தர உயர்வுகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு உரிய தீர்வினை பெற்றுத்தருமாறு அரசாங்கத்தினரிடம் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் இதுவரை எவ்வித தீர்வுகளும் வழங்கப்பட வில்லை.

தீர்வு வழங்குவதாக கூறி சுகாதார ஊழியர்களுடன் பேச்சுவார்த்தையின் போது சுகாதார அமைச்சர் எமக்களித்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. சுகாதார அமைச்சருடன் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைவாகவே கடந்த 6 ஆம் திகதி தாதியர்களால் முன்னெடுக்கப்பட இருந்த தொழிற்சங்க நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது. எனினும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எமக்களித்த வாக்குறுதியை உடைதெறிந்துள்ளார்.

ஆகையால் ஒத்திவைக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை மீள ஆரம்பிப்பதை தவிர வேறு வழியில்லை. ஒருபுறம் அடிப்படை சம்பள உயர்வை காண்பித்து மறுபுறம் கொடுப்பனவு தொகையை குறைத்துள்ளனர். இதனால் சுகாதார ஊழியர்கள் பெற்றுவந்த முழு சம்பளத் தொகையையும் இந்த அரசாங்கம் குறைத்துள்ளது. கனிஷ்ட தாதி ஒருவரின் ஏப்ரல் மாத சம்பளம், மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 600 ரூபாவால் குறைவடைந்து. இது எப்படி நியாயமான தீர்வாக இருக்க முடியும்.

ஆகையால் அரசாங்கத்தின் இச்செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திங்கட்கிழமை (இன்று) நாடளாவிய ரீதியில் சகல அரச வைத்தியசாலைகளிலும் அரச தாதியர் சங்கத்தில் அங்கம் வகிக்கும் தாதியர்கள் காலை 10.00 மணி தொடக்கம் நண்பகல் 1.00 மணி வரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட ஏகமனதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *