புதுப்பொலிவுடன் “கோவிற்சந்தை”| மீண்டும் மக்கள் பாவனைக்கு
மக்களும் பிரதேச சபையும் இணைந்த கூட்டு நிதிப்பங்களிப்புடன் கோவிற்சந்தை புனரமைக்கப்பட்டு, மீண்டும் மக்கள் பாவனைக்கு வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி இன்று மிகச்சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

இது மக்களின் சந்தையாக, கரவெட்டி பிரதேச சபைக்குட்பட்ட , கரவெட்டி மக்களின் பிரதான சந்தையாக பல ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒன்றாகும். அதன் வரலாற்று முக்கியத்துவத்தை உணர்ந்த மக்கள் , பிரதேச சபையுடன் இணைந்த பெரு முன்னெடுப்பிலான புனரமைப்பின் நிறைவாக , மக்கள் பாவனைக்கு வழங்கிய நிகழ்ச்சி இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது.
குறித்த நிகழ்ச்சியை பிரதேச செயலர் திரு. கம்ஸநாதன் தலைமை தாங்க , நிகழ்ச்சிக்கு பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் திரு வேதநாயகன் கலந்துகொண்டிருந்தார்.
இங்கு உரையாற்றிய ஆளுநர், பிரதேச சபையின் 4 மில்லியன் பங்களிப்பும் மக்களின் 27 மில்லியன் பங்களிப்பும் இணைந்ததான இந்த சந்தையின் புனரமைப்புப் பணிகள் என்பது, மிக முன்மாதிரியான செயற்பாடாக அமைந்திருக்கிறது என்று சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த அபிவிருத்திப்பணிகளில் , மக்களின் பங்களிப்பாக, பல தனிப்பட்ட மக்களின் பங்களிப்பும் , இயன்- பார்பரா கரன் நிதியம் , கோவிற்கடவை சனசமூக நிலையம் மற்றும் கிழவிதோட்ட மக்கள் வழங்கிய பங்களிப்புக்களும் அடங்கும்.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண பிரதம செயலாளர் இலட்சுமணன் இளங்கோவன், வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் செல்லத்துரை பிரணவநாதன், வடமாகாண உள்ளூராட்சி திணைக்கள உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி.தேவந்தினி பாபு, வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் நடராஜா திருலிங்கநாதன், கரவெட்டி பிரதேச செயலாளர் திருமதி.உமாமகள் மணிவண்ணன், யாழ் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பொன்னம்பலம் சிறிவர்ணன், கரவெட்டி சுகாதார வைத்திய பணிமனையின் சுகாதார வைத்திய அதிகாரி திருமதி.பிருந்திகா செந்தூரன் மற்றும்
கெளரவ விருந்தினர்களாக கோவிற்சந்தை அபிவிருத்தி கூட்டுறவுச் சங்க தலைவர் சட்டத்தரணி கந்தசாமி மகிந்தன், கோவிற்சந்தை அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் ஆலோசகர் சிவராமலிங்கம் சரவணகுமரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கரவெட்டியின் தனித்துவமான அடையாளமான மாலை நேரச்சந்தையாக அன்றைய காலங்களில் ஆரம்பித்து , இன்றிலிருந்து புதிய பொலிவுடன் அழகுபெற்று முழுநேரச் சந்தையாக , கோவிற்சந்தை அமையவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது