பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை இரத்துச் செய்வதை ஆராய விசேட குழு- மே முற்பகுதியில் பொதுமக்கள், சிவில் அமைப்புகளிடம் கருத்து

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை (PTI) இரத்துச் செய்வது தொடர்பில் ஆராய, அரசாங்கம் விசேட குழுவொன்றை நியமித்துள்ளது.
இக்குழுவின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி றியன்சி அர்சகுலரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க எதிர்வரும் மே மாத முற்பகுதியில் பொதுமக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து கருத்துகளையும் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சர்வதேச நிறுவனங்கள் மற்றும் சமூகங்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளவும் மேற்படி குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை இரத்துச் செய்வது தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தலைமையில் கடந்த 11 ஆம் திகதி நீதி யமைச்சில் நடைபெற்றுள்ளது.
தற்போதுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை இரத்துச் செய்வதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை என இந்தக் கலந்துரையாடலின் போது நீதி யமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதிய சட்ட முன்வரைவு உலகளாவிய பயங்கரவாதத்தையும் சவால்களையும் எதிர்கொள்ளக்கூடிய ஒரு மசோதாவாக இருக்க வேண்டும் என்றும், இந்த நாட்டின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியலமைப்பால் உத்தரவாதமளிக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்திற்கான மனித உரிமைகளை மீறக்கூடாது என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
இந்தத் திருத்தச் சட்டங்களைக் கொண்டுவருவதற்கு முந்தைய அரசாங்கங்கள் உரிய முறையில் செயற்படவில்லை எனவும், தற்போது நியமிக்கப்பட்ட குழு, இந்தச் சட்டத்தை இரத்து செய்வது தொடர்பான பொருத்தமான விடயங்களை மிகக் குறுகிய காலத்திற்குள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் நீதியமைச்சர் மேற்படி குழுவின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக நீதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.