பதிவுகள்

பிள்ளையானின் கடந்த காலத்தை ஆதாரங்களுடன் சி.ஐ.டியிடம் வெளிப்படுத்திய முன்னாள் சகா

சிவா இராமசாமி

‘பிள்ளையான்’ என்று பரவலாக அறியப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், ஏப்ரல் 08ஆம் திகதி மட்டக்களப்பில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைதுசெய்யப்பட்ட பின்னர், ஏப்ரல் 12, 2025 அன்று பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் 2006ஆம் ஆண்டு பல்கலைக்கழக துணைவேந்தர் கடத்தப்பட்டு காணாமல்போனமை தொடர்பாக அவர் கைதானதாக அரசாங்கம் தெரிவித்தது.

ஆட்கடத்தல் குற்றச்சாட்டுக்கப்பால் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கும் பிள்ளையானுக்கும் தொடர்பிருக்கிறதா என்பது தொடர்பில் இப்போது தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் சம்பந்தப்பட்ட வழக்குகள், சம்பவங்கள் குறித்து ஆராய்ந்து தகவல்களைப் பெறுவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குழுவொன்று இந்த நாட்களில் மட்டக்களப்பில் முகாமிட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டுக் காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பிள்ளையான் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவங்களுக்கும் பிள்ளையானுக்கும் தொடர்புகள் இருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவும் அண்மையில் பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.

இந்தச் சூழ்நிலையில் சி.ஐ.டியின் விசேட குழுவொன்று மட்டக்களப்புக்கு விரைந்து அங்கு முக்கிய தகவல் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது. பிள்ளையான் புலிகளிடமிருந்து பிரிந்து வந்து மாதுறு ஓயா இராணுவ முகாமில் படைகளின் பாதுகாப்புடன் தங்கியிருந்துகொண்டு ஆட்கடத்தல் மற்றும் கொலைகளைப் பின்னின்று இயக்கினாரா என்பது குறித்தும் அது தொடர்பான ஆதாரங்கள் உள்ளனவா என்பது பற்றியும் மேற்படி சி.ஐ.டி. குழு துப்புத் துலக்கி வருகிறது.

பிள்ளையான் தொடர்புபட்டார் என்று சொல்லப்படும் ஆட்கடத்தல் சம்பவங்கள், மிரட்டல் மற்றும் கப்பம் பெற்றமை தொடர்பில் அரசியல் சமூகத்தைச் சார்ந்த பிரமுகர்கள் சிலர் சில ஆவணங்களை இந்த சி.ஐ.டி. குழுவிடம் வழங்கியுள்ளதாகவும் அறியமுடிந்தது.

அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மனித உரிமை ஆர்வலருமான மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு 07.02.2005 அன்று மட்டக்களப்பு இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியான புனானை பகுதியில் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்தும் பல முக்கிய தகவல்கள் மேற்படி சி.ஐ.டி. குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறியமுடிந்தது.

ஜனாதிபதி அநுரகுமார அண்மையில் பொதுக்கூட்டமொன்றில் பேசும்போது, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் நினைவு தினமான ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் அந்தச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி கைதுசெய்யப்படுவாரென்ற சாரப்படக் கூறியிருந்தார். அதற்கு முன்னதாகவே இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன.

இதற்கிடையில் வெள்ளிக்கிழமை 18ஆம் திகதி கருத்து வெளியிட்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பிள்ளையானின் நெருங்கிய சகா ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சரணடைந்து கடந்த காலங்களில் இடம்பெற்ற பல சம்பவங்களை விலாவாரியாக விபரிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சிக்கியவர

யார் ?

பிள்ளையானுடன் கடந்த காலங்களில் நெருங்கிச் செயற்பட்ட ஒருவரான ரவீந்திரன் குகன் அல்லது ஹுசைன் என்பவர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் வலையில் சிக்கியுள்ளதாகத் தெரிகிறது.

கடந்த வியாழன் சி.ஐ.டியின் விசேட குழுவால் அவர் மட்டக்களப்பில் பல மணிநேரம் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார் என்று அறியமுடிந்தது. பாதுகாப்புத் துறையின் புலனாய்வு உத்தியோகத்தராக செயற்பட்ட மேற்படி நபர், காத்தான்குடி மற்றும் தாழங்குடா பகுதியில் வசித்து வந்தவர். பிள்ளையானுடன் நெருங்கிச் செயற்பட்ட இவர், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னதாக ஆசாத் மெளலானா தெரிவித்த அதே ஒத்த விடயங்களை சி.ஐ.டி. விசாரணை அதிகாரிகளிடம் பகிர்ந்திருப்பதாக அறியமுடிந்தது. அதேபோல் பின்வரும் முக்கிய தகவல்களையும் மேற்படி குகன் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *