பதிவுகள்

முதன் முறை கூடிய தேசபந்துவை பதவி நீக்கும் விசாரணைக் குழு

    பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மாஅதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோனை அப்பதவியிலிருந்து நீக்குவது தொடர்பாக மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

    நேற்றையதினம் (23) குறித்த குழு முதல் தடவையாகப் பாராளுமன்றத்தில் கூடியது.

    இந்தக் குழுவுக்கு உயர் நீதிமன்ற நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமை தாங்குவதுடன், மேன்முறையீட்டு நீதிமன்ற முன்னாள் நீதியரசர் டபிள்யூ.எம்.என்.பீ. இத்தவல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஈ.டபிள்யூ. எம் லலித் ஏக்கநாயக்க ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாவர்.

    2022ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கைமுறை) சட்டத்தின் 05ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 3 (ஈ) மற்றும் 3(உ) பிரிவுகளிற்கு அமைய துர்நடத்தை மற்றும் பதவியின் தத்துவங்களைப் பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கு குறித்த சட்டத்தின் 5ஆவது பிரிவுக்கு அமைய விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் கடந்த 08ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

    குறித்த சட்டத்திற்கமைய, பிரதம நீதியரசரால் இக்குழுவின் தலைவர் நியமிக்கப்படுவார்.

    பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் உடன்பாட்டுக்கு அமைய அதன் உறுப்பினராக மேன்முறையீட்டு நீதிமன்ற முன்னாள் நீதியரசர் டபிள்யூ.எம்.என்.பீ. இத்தவல நியமிக்கப்பட்டுள்ளார்.

    குறித்த சட்டத்தின் விதிமுறைக்கமைய, பதவியின் அடிப்படையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஈ.டபிள்யூ. எம் லலித் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

    இக்குழு மீண்டும் நாளை (25) கூடவுள்ளது.

    இக்குழு பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோன் தனது பதவித் தத்துவங்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடும்.

    அதன் பரிந்துரைக்கு அமைய பொலிஸ் மாஅதிபரை நீக்குவது தொடர்பான யோசனை மீண்டும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *