யாழ்ப்பாண பெண் மரணம்: 10 வருடங்களின் பின்னர் குற்றவாளிக்கு மரணதண்டனை விதிப்பு!

கடந்த 2015ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 34 வயதுடைய பெண், கொழும்பில் கொலை செய்யப்பட்ட வழக்கில், 10 வருடங்களின் பின்னர் இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு கொழும்பு செட்டியார் தெருவில் அமைந்துள்ள விடுதியில் பெண்ணொருவரை கொலை செய்து, அவரது உடலை பயணப் பைக்குள் அடைத்து, பின்னர் அதனை கொழும்பு பெஸ்டியன் வீதியில் உள்ள பேருந்து நிறுத்தமொன்றில் விட்டுச் சென்றிருந்த கொலைச் சம்பவம் தொடர்பான தீர்ப்பு இன்றையதினம் வழங்கப்பட்டுள்ளது.
வழக்கின் சந்தேக நபர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது. சுமார் 10 வருடங்களாக இடம்பெற்று வந்த குறித்த வழக்கின் இறுதி தீர்ப்பினை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே இன்று அறிவித்தார்.
சந்தேக நபரான பேட்ரிக் கிருஷ்ணராஜாவிக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கினை தாக்கல் செய்திருந்தது. நீண்ட விசாரணைக்குப் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே தீர்ப்பை அறிவித்து, குற்றச்சாட்டுகளில் பிரதிவாதி குற்றவாளி எனக் கண்டறிந்தார்.
தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்னர் நீதிமன்றத்தில் ஆஜரான பிரதிவாதி, குற்றச்சாட்டுகளில் தான் நிரபராதி என்று குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவர் மீது அரசாங்கத் தரப்பால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர் குறித்த குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு, அதன்படி மரண தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
…..
இந்த சம்பவம் 2015ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்ததுடன் பெண்ணின் சடலம் 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி கண்டெடுக்கப்பட்டது.
யாழ். வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 34 வயதுடைய கார்த்திகா என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தார். சடலமாக மீட்கப்பட்ட பெண் கடந்த 3 வருடங்களாக கொழும்பிலேயே வசித்து வந்திருந்தாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
செட்டியார் தெருவில் உள்ள தங்குமிடத்தில் வைத்தே கார்த்திகா கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும் 3 அடி நீளம், 2 அடி அகலம் மற்றும் ஒரு அடி உயரமான கறுப்பு நிற பெட்டியொன்றை சிரமத்துக்கு மத்தியில் சந்தேக நபர் சுமந்துகொண்டு விடுதியில் இருந்து வெளியேறும் CCTV காட்சிகளும் வெளியிடப்பட்டிருந்தன.
சந்தேக நபர் பயணப் பெட்டியுடன் பஸ்டியன் மாவத்தை பஸ் நிலையத்துக்கு சென்றமைக்கான ஆதாரங்களாக CCTV காட்சிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தன. குறித்த வழக்கின் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் சந்தேச நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.