பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்த காட்டு யானை உயிருடன் மீட்புவனஜீவராசிகள் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் 6 மணிநேர முயற்சி

இபலோகம பிரதேச செயலக பகுதிக்குட் பட்ட மஹாஇலுப்பள்ளம் புளியங்குளம் பிரதேசத்தில் உள்ள வீட்டு தோட்டத்திலுள்ள கிணற்றில் விழுந்திருந்த காட்டு யானை ஒன்றை பிரதேச மக்களும் வனஜீவராசிகள் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் இணைந்து சுமார் 6 மணி நேர முயற்சியின் பின்னர் மீட்டுள்ளனர்.
மஹாஇலுப்பள்ளம் புளியங்குளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டு தோட்டத்தில் 3 யானைகள் கொண்ட ஒரு கூட்டம் புகுந்து அங்கிருந்த பழ வகைகளை சேதப்படுத்தியுள்ளது. அதன்போது யானை கூட்டத்தை விரட்ட முற்பட்ட போது தோட்டத்தில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற விவசாய கிணற்றில் நேற்று (18) இரவு 8.45 மணியளவில் காட்டு யானை ஒன்று விழுந்துள்ளது. இது தொடர்பில் கணேவல்பொல வனவிலங்கு பாதுகாப்பு அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் ஸ்தலத்திற்கு வருகை தந்த வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் யானையை மீட்பதற்காக பெகோ இயந்திரங்களின் உதவியை நாடிய போதும் இயந்திரங்கள் கிடைக்காத நிலையில் வனவிலங்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் பிரதேச மக்களும் இணைந்து தங்களின் உயிரைப் பணயம் வைத்து யானையை மீட்கும் பணியை மேற்கொண்டனர்.
கிணற்றின் கரையை வெட்டி கிணற்றை தண்ணீரால் நிரப்பி யானையை மீட்பதற்காக சுமார் 6 மணிநேரம் சென்றதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
