கொரோனாத்தொற்று இதுவரை குடித்த உயிர்களின் எண்ணிக்கை 6 மில்லியன் ஆகியிருக்கிறது.
ஒரு பக்கத்தில் சில நாடுகள் கொவிட் 19 இனிமேலும் மனிதருக்கு ஆபத்தான நோயல்ல என்று பிரகடனம் செய்திருக்கின்றன. அதேசமயம், உலகளவில் கவனிக்கும்போது அக்கொடும் நோயின் பிடியானது இன்னும் தணியவில்லை என்றே காட்டுகிறது அதனால் இறப்பவர்களின் எண்ணிக்கை. கொவிட் 19 இன் மூன்றாவது வருடத்தினுள் உலகம் நுழைந்திருக்கும் இச்சமயத்தில் இறப்புக்கள் 6 மில்லியனைத் தொட்டிருக்கின்றன. [ஜோன் ஹொப்கின்ஸ் பலகலைக்கழக விபரங்களில் ஞாயிறன்றுவரை இறந்தவர்கள் 5,996,882 ஆகும்.]
பல நாடுகளுக்குமிடையிலான போக்குவரத்துக்களும், ஏற்றுமதி இறக்குமதிகளும் மீண்டும் ஆரம்பித்திருக்கின்றன. இதுவரை மூடப்பட்டிருந்த எல்லைகள் திறக்கப்படும்போது, பற்பல காரணங்களுக்காகவும் பயணங்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்திருக்கின்றது. அதன் விளைவாக தூரத்திலிருக்கும் தனிப்படுத்த தீவுகள் – உ+ம் பசிபிப் தீவுகள் போன்றவற்றில் கொவிட் 19 பரவி வருகிறது. மற்றைய ரகங்களை விட அதிவேகமாகப் பரவும் ஒமெக்ரோன் திரிபு காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை அப்படியான பிராந்தியங்களில் அதிகமாகியிருக்கிறது.
தற்போதைய நிலைமையில் கொவிட் 19 தடுப்பூசி போடாதவர்களிடையேனான பெரும் தொற்றாக மாறி உயிர்களைக் குடித்து வருகிறது.
2020 இல் கொவிட் 19 பரவ ஆரம்பித்து முதல் ஒரு மில்லியன் பேர் இறக்க ஏழு மாதங்களாகியது. அது மேலும் நான்கு மாதங்களில் இரண்டு மில்லியனைத் தொட்டது. அதன் பின்பு கடந்த ஒக்டோபர் மாதம் வரை ஒவ்வொரு மூன்று மாதங்களிலும் அவ்வியாதி ஒரு மில்லியன் உயிர்களைக் குடித்து 5 மில்லியன் இறப்புக்களைத் தொட்டிருந்தது.
ஆறு மில்லியன் என்பது நாடுகளின் உத்தியோகபூர்வமான கொவிட் 19 இறப்புக்களாகும். ஆனால், ஆரம்பக்கட்டத்தில் கொவிட் 19 பரிசோதனைகள் உலகளவில் அரிதாகவே இருந்தது. தொடர்ந்தும் வறிய நாடுகளில் தேவையான அளவுக்கு அவ்வியாதியின் பரவல் பற்றி அறியும் வசதிகள் இல்லை. எனவே, உண்மையிலேயே கொரோனாக்கிருமிகளின் பிடியில் அகப்பட்டு இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை 14 முதல் 23.5 மில்லியன் பேர் என்கிறார் எட்வார்ட் மத்தேயு என்ற தொற்று நோய்ப்பரவல் கணிப்பீடுகள் செய்யும் நிறுவனமொன்றின் ஆராய்ச்சியாளர்.
சாள்ஸ் ஜெ. போமன்