ரஷ்யாவில் கைதுசெய்யப்பட்ட பிரபல கூடைப்பந்து வீராங்கனை தொடர்ந்தும் காவலில்.
ரஷ்யப் படைகள் எந்தச் சமயத்திலும் உக்ரேனுக்குள் நுழைவதற்குத் தயார் நிலையில் இருப்பதாக அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் எச்சரித்த சமயத்தில் ரஷ்ய விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார் பிரபல கூடைப்பந்து வீராங்கனை பிரிட்னி கிரினர் [Brittney Griner]. பெப்ரவரி 17 ம் திகதியன்று மொஸ்கோ விமான நிலையத்திலிருந்து பயணிக்க முற்பட்ட பிரிட்னியிடம் கஞ்சா எண்ணெய் இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுப் பாதுகாப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
இரட்டை ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள் பெற்ற பிரிட்னி கிரினர் அமெரிக்காவின் மிகப் பிரபலமான கூடைப்பந்து விளையாட்டு வீரராகும். 206 செ.மீ உயரமும் 31 வயதுமான கிரினர் அமெரிக்காவில் விளையாடுவதுடன் ரஷ்யாவின் எகதரின்பெர்க் குழுவிலும் விளையாடி வருகிறார்.
கைது செய்யப்பட்ட சமயத்திலிருந்து அங்கிருக்கும் ரஷ்யத் தூதுவராலயம் மூலம் கிரினரைச் சந்திக்க ஒழுங்கு செய்யும்படி கோரி வருகிறது அமெரிக்க அரசு. வெளிநாடுகளில் அமெரிக்கக் குடிமக்கள் சட்டப் பிரச்சினைகளில் மாட்டிக்கொண்டால் அவர்களுக்கு அமெரிக்க அரசு உதவுவது வழக்கம் என்ற முறையில் அக்கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கிறது.
இரண்டு நாடுகளுக்குமிடையே ராஜதந்திர உறவுகள் மிகவும் சேதமடைந்து இருக்கும் சந்தர்ப்பத்தில் கிரினர் ரஷ்யாவில் மாட்டிக்கொண்டிருப்பதாலேயே அவரைச் சந்திக்க அமெரிக்க அதிகாரிகள் கோருவதை ரஷ்யா மறுத்து வருவதாக அமெரிக்கா குறிப்பிடுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்