தேசிய சமூக விஞ்ஞானப் போட்டியில் காரைதீவு குகேஸ் இரு பதக்கங்கள் பெற்று சாதனை

கல்வி அமைச்சு நடாத்திய தேசிய மட்ட 2024 ஆம் ஆண்டுக்கான சமூக விஞ்ஞானப் போட்டிகளில் காரைதீவு மாணவன் சத்தியநாதன் குகேஸ் இரு பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி மாணவனான எஸ்.குகேஸ், இரண்டு பதக்கங்களுடன் சாதனை படைத்துள்ளார்.
செல்வன் சத்தியநாதன் குகேஸ் அகில இலங்கை ரீதியில் 2ஆம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கத்தினையும், தேசிய மட்டத்தில் 3ஆம் இடம் பெற்று வெண்கலப் பதக்கத்தையும், பெற்றுக் கொண்டதன் மூலம் இச்சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.
காரைதீவு விபுலானந்தா வீதியில் வதியும், ஆலையடிவேம்பு பிரதேச சபையின் நிதி உதவியாளர் சத்தியநாதன் – ரதி தம்பதியினரின் ஏக புதல்வர் ஆவார்.
தேசிய மட்டத்திலான இப்போட்டியில் கிழக்கு மாகாணம் முதல் நிலையினைப் பெற்றிருப்பதுடன் மாகாணத்தில் 6 இடங்களையும் தேசிய மட்டத்தில் 1 இடத்தினையும் பெற்று கல்முனை வலயம் கிழக்கு மாகாணத்தில் 5ஆம் இடத்தினைப் பிடித்துள்ளது.
வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டி சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் எம் எஸ்.சஹூதுல் நஜீம் தலைமையில் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.