பல்வேறு பிரதேசங்களில் வீடுகளின் கதவுகளை உடைத்து திருட்டு ; சந்தேக நபர் கைது

பல்வேறு பிரதேசங்களில் உள்ள வீடுகளின் கதவுகளை உடைத்து பெறுமதியான பொருட்களைத் திருடியதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (27) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்தின் தெற்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மேல் மாகாணத்தின் தெற்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒருகொடவத்தை பிரதேசத்தில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குருணாகல், நாரம்மல பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபர் கொஹுவளை, கிருலப்பனை மற்றும் நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களில் உள்ள பல்வேறு வீடுகளின் கதவுகளை உடைத்து பெறுமதியான பொருட்களைத் திருடியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.
மேலும், சந்தேக நபரிடமிருந்து 05 மடிக்கணினிகள் மற்றும் கமரா உள்ளிட்ட பல்வேறு இலத்திரனியல் பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாணத்தின் தெற்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.