40 வயதுக்கு மேற்பட்டவர்களை வைத்திய பரிசோதனைக்குட்படுத்த நடவடிக்கை

இந்நாட்டில் உள்ள 40 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பிரஜையும் குறிப்பிட்ட காலப்பகுதியில் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தி உரிய சிகிச்சை சேவைகளை வழங்குவதே அரசாங்கத்தின் முதன்மையான நோக்கம் என சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார்.

அண்மையில் கண்டி ரனவன புரான விகாரையில் இடம்பெற்ற கிராமப்புற மக்களுக்கு சுகாதார சேவையை வழங்கும் “சுவ உதான” நடமாடும் மருத்துவ முகாம் திட்டத்தின் ஆரம்ப விழாவில் பிரதம விருந்தினராக பங்கேற்றிருந்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் சார்பான அரசாங்கம் என்ற ரீதியில் எதிர்வரும் 5 வருடங்களுக்குள் இந்நாட்டில் உள்ள 40 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பிரஜையும் குறிப்பிட்டக் காலப்பகுதிக்குள் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவதுடன் அவர்களுக்கான சிகிச்சை சேவைகளையும் வழங்க தற்போதைய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

எவ்வாறாயினும் இவ்வருடம் அல்லது அடுத்த வருடத்திற்குள் மேற்படி விசேட திட்டத்தை செயற்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. குறித்த நீண்டகால வேலைத்திட்டம் அரசாங்கத்தின் தேசிய கொள்கை வேலைத்திட்டத்திலும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதுடன் அதை செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நீண்டகால திட்டத்தின் குறுகிய கால நடவடிக்கையாக “சுவ உதான” என்னும் நடமாடும் மருத்துவ முகாம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களை தொற்றா நோய்களில் இருந்து பாதுகாப்பதற்காகவும், நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதை தடுப்பதற்காக இந்த விசேட திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த மருத்துவ முகாம்களுக்கு அவசியமான மனித வளம் உள்ளிட்ட ஏனைய வழங்களை வழங்குவதன் மூலம் கிராமங்களில் உள்ளவர்களுக்கும் வலுவான சிகிச்சை சேவைகளை வழங்க முடியும் என சுகாதார அமைச்சு எதிர்பார்த்துள்ளது.

”சுவ உதான” நடமாடும் மருத்துவ முகாம் சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சின் தகவல் மற்றும் விளம்பர பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது கிராமப்புற மக்களின் சுகாதார தேவையை நோக்கமாகக் கொண்டு நாடு முழுவதும் கிராமப்புற மட்டத்தில் செயல்படுத்தப்படும் ஒரு திட்டமாகும்.

இந்த மருத்துவ முகாமில் நடமாடும் ஆய்வக சேவைகள், பல் மருத்துவமனை, கண் மருத்துவமனை, இரத்த சர்க்கரை அளவு பரிசோதனை, இரத்த லிப்பிட் அளவு பரிசோதனை, உடல் நிறை குறியீட்டெண் அளவீடு மற்றும் இரத்த அழுத்த அளவீடு உள்ளிட்ட பல சேவைகளை வழங்கி வருகிறது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *