சுற்றுலாப்பயணியிடம் இலஞ்சம் கோரிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது!

வெளிநாட்டு சிகரெட்டுகளை வைத்திருந்ததற்காக அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணி ஒருவரிடம் 50,000 ரூபா பணம் கேட்டதாக கூறி கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய சார்ஜென்ட் உட்பட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெண் சுற்றுலாப் பயணி மீது சட்ட நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் சார்ஜென்ட் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் பணத்தை கோரியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை கொள்ளுப்பிட்டி போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டிருந்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள், சுற்றுலாப் பயணி பயணித்த முச்சக்கர வண்டியை சோதனை செய்தனர்.
சோதனையின் போது, சுற்றுலாப் பயணியிடம் வெளிநாட்டு சிகரெட்டுகளின் பைக்கற் ஒன்றை கண்டுபிடித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், அத்தகைய சிகரெட்டுகள் இலங்கையில் சட்டவிரோதமானது என தெரிவித்து இந்தச் சம்பவத்திற்கு சுற்றுலாப் பயணிகளிடம் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்க அவர்களிடம் 100,000 ரூபா இலஞ்சம் கேட்டுள்ளனர்.
இச்சம்பவத்தின் போது சுற்றுலாப் பயணியிடமிருந்து சிகரெட் பைக்கற்றும் 50,000 ரூபா பணத்தையும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பறிமுதல் செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.