அம்பாந்தோட்டையில் விண்வெளி தளத்தை அமைக்கும் திட்டம்

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பகுதியில் 1.7 மில்லியன் டொலர் செலவில் ஒரு விண்வெளி தளத்தை அமைக்கும் திட்டத்தில் முதலீடு செய்வது குறித்து இந்தியாவும் ஜப்பானும் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்தத் திட்டங்கள் வெற்றியடைந்தால், சுமார் 4,000 இலங்கையர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும், இந்தத் திட்டத்தில் ஜப்பான் ஆர்வம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், உரிய தகுதிகள் குறித்து ஆராய ஜப்பானியக் குழு ஒன்று இலங்கைக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, ஜப்பானிய அரசாங்கத்துடன் இணைந்த விண்வெளி ரொக்கெட் ஏவுதள நிறுவனமான ‘அஸ்ட்ரோ லோஞ்ச்’ இந்த திட்டத்தை இந்த நாட்டில் நிறுவ திட்டமிட்டுள்ளது.
அம்பாந்தோட்டையில் இதுபோன்ற திட்டங்களை இந்தியாவும் பரிசீலித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விண்வெளி தளத்தை அமைப்பதன் மூலம் நாட்டிற்கு கிடைக்கும் பொருளாதார நன்மைகள் பில்லியன் கணக்கான டொலர்களில் உள்ளன என்பதும் தெரியவந்துள்ளது.
அம்பாந்தோட்டை, கிரிந்த மற்றும் யால பகுதிகளில் ஈர்ப்பு விசை குறைவாகவும், கடலுக்கு அருகாமையில் இருப்பதாலும், இந்த நாடுகள் விண்வெளியில் முதலீடு செய்வதில் கவனம் செலுத்தியுள்ளன.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது ஹம்பாந்தோட்டையில் ஈர்ப்பு விசை குறைவாக இருப்பதால், இந்தப் பகுதிகளில் செயல்படுவது பொருத்தமானது என்ற கருத்தையும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தத் திட்டங்களுக்கான விநியோகங்களுக்கு மத்தள விமான நிலையம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் பயன்படுத்தப்பட உள்ளன.