பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தற்போது விளம்பரப்படுத்தப்படும் மோசடியான கிரிப்டோ பண வர்த்தகம் தொடர்பான மோசடியான விளம்பரங்களை பிரதமர் அலுவலகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்த மோசடி விளம்பரங்களை சமூக ஊடகங்கள் ஊடாக ஊக்குவித்து, இலங்கை மக்களை தவறாக வழிநடத்தும் நோக்கில் வெளிநாட்டு நிறுவனங்கள் செயற்பட்டுவருவதுடன், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கையின் பிரபலமானவர்களின் பெயர்களை பயன்படுத்தி இந்த மோசடியான விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.
இந்த விளம்பரங்களின் முக்கிய நோக்கம் இந்த நாட்டில் உள்ள பிரபலமானவர்கள் குறித்த மக்களின் நல்லெண்ணத்தை மலினப்படுத்துவதன் மூலம் பொதுமக்களை தவறாக வழிநடத்துவதும், பிரபலமானவர்கள் மீதான நம்பிக்கையை சிதைப்பதும் ஆகும்.
லிதுவேனியாவில் இருந்து செயற்படும் இந்த மோசடி கணக்குகளின் ஊடாக மேற்கொள்ளப்படும் இந்த மோசடியான விளம்பரங்கள் இலங்கையில் உள்ள முகநூல் பாவனையாளர்களை குறிவைத்து தீவிரமாக செயற்படுவதாக எமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
அண்மையில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் கிரிஷாந்த அபேசேன மற்றும் பிரபல ஊடகவியலாளர்களான அமந்தா பெரேரா மற்றும் சுனந்த தேசப்பிரிய மற்றும் முன்னைய சில சந்தர்ப்பங்களில் இலங்கையின் ஏனைய பிரபலங்களும் இந்த விளம்பரங்கள் மூலம் இலக்குவைக்கப்பட்டிருந்தனர்.
குறிப்பாக அரசாங்க அதிகாரிகள் மற்றும் பிரபலங்களால் அங்கீகரிக்கப்பட்டதாக பொய்யாகக் கூறும் கிரிப்டோ பண முதலீடுகளை ஊக்குவிக்கும் இணைய விளம்பரங்கள் குறித்து பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
எந்தவொரு அரசாங்க அதிகாரியோ அல்லது அமைச்சோ எந்தவிதமான கிரிப்டோ பண முதலீட்டு திட்டத்தையும் அங்கீகரிக்கவில்லை.
மேலும், முறையிடும் (Report) மற்றும் நீக்கும் (Remove) கோரிக்கைகள் இருந்தபோதிலும், இந்த மோசடிகள் சமூக ஊடக தளங்களில் தொடர்ந்து தோன்றிவருவதுடன், மோசடியான விளம்பரங்களை உரிய முறையில் கட்டுப்படுத்துவதற்கான பேஸ்புக்கின் இயலாமை குறித்த கடுமையான சந்தேகங்களையும் கரிசனைகளையும் எழுப்புகிறது. இந்த ஏமாற்று வணிகங்கள் பரவுவதைத் தடுக்கவும், நிதி மோசடிகளில் இருந்து இலங்கைப் பயனர்களைப் பாதுகாக்கவும் உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு META (Facebook இன் தாய் நிறுவனத்திடம்) கேட்டுக்கொள்கிறோம்.
பிரபலமானவர்களின் அங்கீகாரம் உள்ளதாகக் கூறப்படும் சந்தேகத்திற்கிடமான விளம்பரங்களில் ஈடுபடவோ அல்லது அவற்றை கிளிக் செய்யவோ வேண்டாம் என்றும், மேலும் Facebook மற்றும் Instagram இல் மோசடியான விளம்பரங்களை அந்தந்த நிறுவனங்களுக்கு நேரடியாக முறைப்பாடு (Report) செய்யுமாறும் . முதலீடு செய்வதற்கு முன் அனைத்து நிதி வாய்ப்புகளையும் முறையான மூலங்களின் ஊடாக சரிபார்க்குமாறும் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம்.
பிரதமர் அலுவலகம் என்ற வகையில், இணையவழி ஊடாக மேற்கொள்ளப்படும் மோசடிகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருவதுடன், மேலும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். தவறான தகவல்கள் மற்றும் மோசடியான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும், இதுபோன்ற பிரச்சாரங்களில் பொறுப்புடன் செயல்படுமாறும் அனைத்து ஊடக நிறுவனங்களிடமும், சமூக ஊடக ஆர்வலர்களிடமும் கேட்டுக் கொள்கிறோம்.
அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தகவல்களை அறிய பிரதமர் அலுவலகத்தின் இற்றைப்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் சமூக ஊடகத்தை நாடுமாறு இந்நாட்டின் அனைத்துப் பொதுமக்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறோம்.