மல்வத்தை மாணவி ஜினோதிகா மகத்தான இலங்கை இரசாயனவியல் ஒலிம்பியாட் போட்டியில் சாதனை !

இலங்கை கனிஷ்ட இரசாயனவியல் ஒலிம்பியாட் போட்டியில் கிழக்கு மாகாணத்தில் இருந்து சம்மாந்துறை வலய மல்வத்தை விபுலானந்த தேசிய பாடசாலை மாணவி சிவரூபன் ஜினோதிகா மகத்தான சாதனை படைத்துள்ளார் .
அவர் இத்தேசியபோட்டியில் மூன்றாவது இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
கிழக்கு மாகாணத்திலிருந்து மாணவி ஜினோதிகா மாத்திரமே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் மல்வத்தை விபுலானந்த தேசிய பாடசாலையில் தரம் 11 இல் கல்விகற்று வருகிறார். இவர் மல்வத்தை திருவள்ளுவர்புரம் சிவரூபன் பிரபாஜினி தம்பதியினரின் மூத்த புதல்வியாவார்.
இலங்கை இரசாயனவியல் மன்றம்
வருடாந்த பாடசாலை மாணவர்களிடையே மீட்திறன் கூடிய மாணவர்களுக்கு தேசிய இரசாயனவியல் ஒலிம்பியாட் போட்டியை நடத்தி வருகின்றது .
இம்முறை முதல் தடவையாக 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு கனிஷ்ட இரசாயனவியல் ஒலிம்பியாட் போட்டியை கடந்த ஜனவரி மாதம் 25ஆம் தேதி நடாத்தியது.
நாடளாவிய ரீதியில் 8 நிலையங்களில் நடாத்திய போட்டியில் 293 மாணவர்கள் தோற்றியிருந்தார்கள் .
கிழக்கில் இருந்து 8 மாணவர்கள் கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தோற்றிருந்தார்கள் .
போட்டியில் மாணவி ஜினோதிகா மாத்திரமே தேசிய ரீதியில் மூன்றாவது இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இவர்களுக்கான சான்றிதழ்கள் பதக்கங்கள் எதிர்வரும் ஜூன் மாதம் கொழும்பில் வைத்து வழங்கப்பட இருக்கின்றது என இரசாயனவியல் மன்றம் அறிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்திற்கும், சம்மாந்துறை வலயத்திற்கும், மல்வத்தைக்கும் மீண்டும் பெருமை சேர்த்த மாணவி சிவரூபன் ஜினோதிகாவை சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ். மகேந்திரகுமார் மற்றும் கல்விச் சமூகத்தினர் பாராட்டி வருகிறார்கள் .
இவர் ஏலவே, தேசிய கணித விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டிகளிலே பல பதக்கங்களை பெற்று சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
