2018 ம் ஆண்டு நோபலின் இலக்கியத்திற்கான பரிசு கொடுக்கப்படுமா?
வருடாவருடம் இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்குரியவரைத் தேர்ந்தெடுக்கும் சுவிடிஷ் அகாடமியின் உயர்மட்ட அங்கத்தவர்களுக்கு இடையே உண்டாகிச் சீழ்ப்பிடித்திருக்கும் பிரச்சினைகளால் அங்கத்தவர்களில் பலர் தங்கள் கடமைகளைச் செய்ய மறுத்து வருகிறார்கள்.
நிலைமை உடனடியாகச் சீரடையும் என்ற நம்பிக்கை குறைந்து வருவதால் இவ்வருடத்துக்கான நோபலில் இலக்கியப் பரிசைக் கொடுப்பதை நிறுத்தலாமா என்ற எண்ணம் உருவாகி வளர்ந்து வருகிறது.
சுவீடனைச் சேர்ந்த அல்பிரட் நோபல் இறக்குமுன்னர் தனது சொத்துக்களை உலகின் முக்கிய துறைகளில் முன்னணியில் இருப்பவருக்குக் கொடுக்கவேண்டும் என்று உயில் எழுதியிருந்தார். 1901 முதல் கொடுக்கப்பட்டு வரும் இலக்கியத்துக்கான பரிசை கடந்த வருடம் வரை 114 பேர் பெற்றிருக்கிறார்கள்.