கொரோனாத் தொற்றுக்களைக் கட்டுப்படுத்த மலேசியாவில் அவசரகாலச் சட்டங்கள் பிரகடனம்!
கொரோனாத்தொற்றுக்களைக் காரணம் காட்டி மலேசியப் பாராளுமன்றம் மூடப்பட்டு, பிராந்திய அதிகாரங்களும் செயற்படா என்றும் ஆகஸ்ட் 1 தேதிவரை தேர்தல்களெதுவும் நடக்காது என்று அறிவிக்கப்படுகிறது. மலேசியாவின் அரசரின் அங்கீகாரத்தைத் திங்களன்று பெற்றுக்கொண்ட பிரதமர் செவ்வாயன்று காலை [12.01] தொலைக்காட்சியில் அறிவித்தார்.
பிரதமர் முஹ்யித்தீன் எவ்வித முன்னறிவிப்புமின்றிச் செய்த இந்த அறிவிப்பு நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. 2018 இல் கடைசியாக நடந்த தேர்தலின் பின்னரிருந்தே ஆளும் கட்சிகளுக்கிடையே பல இழுபறிகள் நடந்துவருகின்றன. அக்கூட்டணிக்குள்ளிருந்து விலகுவதும், திரும்ப வருவதுமாக சில கட்சிகள் இருக்கின்றன. கூட்டணியின் பெரிய கட்சி சமீபத்தில் தலைமை தாங்குவதற்குப்பிரதமர் முஹ்யித்தீன் யாசினுக்குத் தாம் கொடுத்திருந்த ஆதரவைப் பின்வாங்கப்போவதாக அறிவித்திருக்கும் நேரத்தில் மக்கள் பிரதிநிதிகளின் சகல பதவிகளும் புடுங்கப்பட்டுத் தேர்தல்கள் நடக்காதென்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த வருடம் மூன்று மாதங்களுக்கு நாட்டில் பொதுமுடக்கத்தை அறிவித்து அதன் பின் முழுவதுமாகக் கொரோனாத் தொற்றுக்கள் இல்லையென்று அறிவிக்கப்பட்டிருந்தன. 138,000 தொற்றுக்களும் தினசரி சுமார் 2,000 மேற்பட்டவர்களுக்குத் தொற்றுவதாகவும் அறிவிக்கப்படுகிறது. இறப்பு 555 பேர்.
தனது பதவிக்கு ஆபத்துவருமென்ற நிலையில் பிரதமர் அவசரகால நிலையைப் பிரகடனம் செய்து இராணுவத்துக்கு அதிக உரிமைகளைக் கொடுத்து ஏனைய அரசியல்வாதிகளை மிரட்டவும், மக்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தவும் திட்டமிடுகிறார் என்று பல பக்கங்களிலுமிருந்து விமர்சனங்கள் எழுந்துகொண்டிருக்கின்றன. அவசரகால நிலைமையில் மக்களுடைய உரிமைகளுக்கான பாதுகாப்புகள் எப்படியிருக்கும் போன்ற விபரங்கள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்