26 மில்லியன் பேர் வாழும் ஷங்காய் நகரம் கொரோனாப் பரிசோதனைகளுகாக மூடப்படுகிறது.
கடந்த நாட்களில் தினசரி ஆயிரக்கணக்கானோருக்குக் கொரோனாத் தொற்றுக்கள் உண்டாகியிருப்பதாகக் காணப்படும் சீனாவின் நகரம் ஷங்காய். நாட்டின் மிக முக்கியமான இந்த வர்த்தக மையத்தில் அடிக்கடி கொரோனாத்தொற்றுக்கள் காணப்பட்டாலும் அந்த நகரின் இயக்கத்தின் பொருளாதார முக்கியத்துவம் கருதி ஆங்காங்கே சிறிய அளவில் முடக்கங்களையே இதுவரை சீனா நிறைவேற்றி வந்திருக்கிறது. திடீரென்று ஞாயிறன்று இரவு ஷங்காய் நகரமே முடக்கத்துக்குள் உட்படுத்தப்படுவது பற்றிய செய்தி வெளியாகியது.
ஒமெக்ரோன் திரிபு கொரோனாத் தொற்றே ஷங்காய் நகர நிர்வாகத்தைப் பொதுமுடக்க நிலைமைக்கு உட்படுத்தியிருக்கிறது. திங்களன்று முதல் நகரின் பாதிப்பங்கு பொதுமுடக்கத்துக்கு உட்படுத்தப்படுகிறது. தொடர்ந்து நான்கு நாட்கள் அப்பகுதியிலுள்ளவர்கள் கொரோனாத்தொற்றுப் பரிசீலனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அதையடுத்து மற்றைய பாதிப்பங்கு முடக்கப்பட்டு அங்கும் அதேபோன்ற பரிசீலனைகள் நடாத்தப்படும்.
சீனாவின் மற்றைய நகரங்கள் போன்று நீண்டகாலப் பொதுமுடக்கத்துக்கு ஷங்காய் உட்படுத்தப்படாவிட்டாலும் முடக்கம் திடீரென்று அறிவிக்கப்பட்டதால் நகரின் வர்த்தக நிறுவனங்களின் பணிகள் பெருமளவில் செயற்படாமல் போகும் என்று வர்த்தகர்களின் கூட்டுறவு அமைப்பு தெரிவிக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்