ஒரே ஒரு சட்டம் – துப்பாக்கிகளை மௌனமாக்கியது.
ஒவ்வொரு தடவையும் யாராவது ஒருவர் அமெரிக்காவில் துப்பாக்கியை எடுத்துப் பலரைச் சுட்டுக்கொல்லும்போதும் எழுப்பப்படும் சர்ச்சை “அமெரிக்காவில் துப்பாக்கிகளை வாங்க, வைத்திருக்க, பாவிக்க இருக்கும் மிக இலகுவான சட்டங்களை இறுக்கவேண்டுமா?” என்பதாகும். ஐக்கிய அமெரிக்காவின் துப்பாக்கிக் கலாச்சாரத்தை ஆதரிக்கும் மிகப் பலமான இயக்கம் எந்தக் கட்சி நாட்டின் ஆட்சிக் கட்டிலில் இருந்தாலும் தனது குறிக்கோளான மிக இலகுவான சட்டங்களைக் காப்பாற்றியே வருகிறது.
தனி மனிதனின் உரிமைகளில் ஒன்று துப்பாக்கி வைத்திருப்பவைகளில் ஒன்றாகும் என்று நம்பும் அமெரிக்கர்களுக்கு அது ஒரு முக்கிய பாரம்பரிய வழமை. “சட்டங்களைக் கடுமையாக்கினாலும் மிலேச்சத்தனமாகக் கொல்லப் போகிறவர்களைத் தடுக்கமுடியாது,” என்று அவர்கள் வாதாடுகிறார்கள்.
வித்தியாசமாக இம்முறை அமெரிக்கச் சரித்திரத்திலேயே மிகப் பெரிய மாணவர்கள் போராட்டம் வெடித்திருக்கிறது “March for Our Lives” என்ற பெயருடன். சில வாரங்களுக்கு முன்பு பார்க்லாண்ட் கல்லூரியில் நடந்த துப்பாக்கிக் கொலைகளின் பின்பு “இனியும் பொறுக்கத் தயாராக இல்லை, துப்பாக்கிக் கலாச்சாரத்துக்கு அமெரிக்காவில் முடிவு வையுங்கள்,” என்று அரசியல்வாதிகள் நோக்கி உரத்த குரலுடன் ஆரம்பித்த மாணவர்கள் படிப்படியாக நாடு முழுவதும் உள்ள மாணவர்களை ஒன்றுதிரட்டு இன்று அமெரிக்கா முழுவதும் தங்கள் பலத்தைக் காட்டுகிறார்கள். “எங்கள் நோக்கம் இவ்வருட இறுதியில் வரவிருக்கும் தேர்தல்களை நோக்கியிருக்கும், அச்சமயத்தில் அரசியல்வாதிகள் எங்கள் குரல்களைக் கேட்டே ஆகவேண்டும்,” என்று திடமாகச் சொல்கிறார்கள் மாணவர் பிரதிநிதிகள்.
அவர்களுக்கு வெற்றி கிடைக்கிறதோ என்னவோ அமெரிக்காவின் இன்றைய ஆயுதத் தாராளமனப்பான்மை போன்ற பாரம்பரியத்தைக் கொண்டிருந்த இன்னொரு உலக நாடு, ஆயுதம் வாங்குவதற்காக இருக்கும் சட்டங்களைக் கடுமைப்படுத்தியதால் இதுவரை ஒரேயொரு தனிமனிதர் – பலரைச் சுட்டுத்தள்ளுதல் இல்லாமல் காலந்தள்ளிவருகிறது.
அதுதான் ஆஸ்ரேலியா. 1996 நடந்த போர்ட் ஆர்தர் படுகொலைகளில் வெவ்வேறு வயதான 35 பேர் ஒரு இளைஞனால் கொல்லப்பட்டார்கள். அன்று ஆஸ்ரேலியப் பிரதமராக இருந்தவர் ஜோன் ஹவார்ட்.
நடந்த கொலைகளுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று எவராலும் மிக இலகுவாக துப்பாக்கி போன்ற ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய முடிவதே என்று பல ஆஸ்ரேலியர்களும் கருதினர். 12 நாட்களில் ஜோன் ஹவார்ட் புதிய கடுமையான ஆயுதப் பாவனைச் சட்டங்களைப் பாராளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றினார்.
அந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதிலிருந்து ஒரே வருடத்தில் நாட்டின் துப்பாக்கி சம்பந்தப்பட்ட குற்றங்கள் 60 விகிதத்தால் குறைந்தது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அன்றுமுதல் இன்றுவரை 22 வருடங்களாக ஆஸ்ரேலியாவில் பைத்தியக்காரத்தனமாகப் பலரைக் கொன்றொழிக்கும் கூட்டுக் கொலைகள் எதுவும் நடக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.