ஸ்பெயினில் நீதிகேட்டு திரண்ட மக்கள்
28.04 சனியன்று, ஸ்பெயினில் பத்தாயிரத்துக்கும் அதிகமான ஸ்பானியர்கள் பம்ப்லோனா நகரின் வீதிகளில் திரண்டு பாலியல் பலாத்காரம் செய்த ஐந்து பேர்களை விடுவித்த நீதித்துறைக்கு எதிராகக் குரலெழுப்பினார்கள். காரணம் நகரில் 2016 ஏழாம் மாதத்தில் நடந்த காளையை அடக்கும் போட்டியன்று ஒரு 18 வயதுப் பெண் கற்பழிக்கப்பட்டதும், அக்குற்றத்துக்காகக் கைதுசெய்யப்பட்டவர்களை ஒரு சில நாட்களுக்குப் பின் நீதிமன்றம் விடுதலை செய்ததும் ஆகும். அவ்வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய நீதிபதிகளை வேலையை விட்டு நீக்கவேண்டும் என்ற இணையத்தளக் கோரிக்கை 1.2 மில்லியன் பேர்களால் கைச்சாத்திடப்பட்டிருக்கிறது.
குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தாங்கள் செய்த பாலியல் வன்முறைகளைக் கையிலிருந்த தொலைபேசிகளில் படமாக்கி “வட்ஸப்பிலும்” பகிர்ந்துகொண்டனர். ஸ்பானியச் சட்டப்படி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டமை நிரூபிக்கப்படவேண்டுமானால் மறுக்க முடியாத காரணிகளால் பாதிக்கப்பட்டவரின் விருப்பமின்றி, பலவந்தமாகக் குறிப்பிட்ட பலாத்காரம் நடந்தது என்பது நீதிமன்றத்தில் காட்டப்படவேண்டும்.
பாதிக்கப்பட்ட 18 வயதுப் பெண்ணின் விடயத்தில் அப்படியான நிரூபணம் செய்யமுடியாத நிலையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அவளைப் “பாலியல் தொந்தரவு,” செய்தார்கள் என்று மட்டும் ஏற்கப்பட்டதால் அவர்களுக்கு பாலியல் பலாத்கார வன்முறை செய்ததற்கான தண்டனை கொடுக்கப்படவில்லை, பதிலாக சுதந்திரமாக வெளியே போக அனுமதிக்கப்பட்டது.
இதனால் ஸ்பெயினில் பல இடங்களிலும் ஏற்பட்ட மிகப்பெரிய எதிர்ப்பைத் தவிர்க்கமுடியாமல் ஸ்பானிய அரசு இவ்விடயத்தில் சட்டங்களை மீள் பரிசீலனை செய்து தண்டனைகளைக் கடுமையாக்குவதாக உறுதியளிக்கிறது.