வத்திக்கானின் கத்தோலிக்க திருச்சபைக்குள் இன்னொரு கறுப்பு ஆடா?
வத்திக்கானின் பொருளாதார உயரதிகாரியாக இருக்கும் ஆஸ்ரேலியாவைச் சேர்ந்த கர்தினால் ஜோர்ஜ் பெல் மீது பலரைப் பாலியல் இச்சைக்குப் பாவித்ததற்காக வழக்குத் தொடர ஆஸ்ரேலிய அரச வழக்கறிஞர் முடிவுசெய்திருக்கிறார்.
1970-80 களில் ஆஸ்ரேலியாவில், மெல்போர்னுக்கு அருகிலுள்ள பலராத் என்ற நகரில் பாதிரியாராக இருந்தபோது பெல் அக்குற்றங்களைச் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. அதே நகரத்தில் ஆஸ்ரேலியாவின் கத்தோலிக்க திருச்சபையினுள்ளிருந்த பல பாலியல் குற்றவாளிகள் இருந்திருக்கிறார்கள்.
அதே நகரில் இன்னொரு பாதிரியார் 65 சிறார்களைத் தனது பாலியல் இச்சைக்குப் பாவித்ததற்காகத் தண்டிக்கப்பட்டிருக்கிறார். அவைகள் வெளியாக ஆரம்பித்தபோது அவரைத் திருச்சபை வெவ்வேறு தேவாலயங்களுக்கு மாற்றியது. மாறிப்போன 11 இடங்களிலும் அப்பாதிரியார் அதே குற்றங்களைச் செய்தது தெரியவந்தது.
ஜோர்ஜ் பெல் பற்றிய விசாரணைகள் அவர் பாதிரியாராக இருந்த சமயத்திலும் மேற்றிராணியாராக இருந்த சமயத்திலும் நடந்தவை பற்றியதாகும். அவைகள் எத்தனை என்று இதுவரை வெளியிடப்படவில்லை. பல சாட்சியங்களும், பாதிக்கப்பட்டவர்களும் விசாரிக்கப்பட்டு அவர்களில் பாதிப்பேரின் வழக்குகள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்படவிருக்கின்றன.
ஜோர்ஜ் பெல் மேற்றிராணியாராக இருந்த சமயத்தில் அவரது திருச்சபைப் பிராந்தியத்தில் பல பாதிரியார்கள் மீதான குற்றங்கள் வெளிவந்தபோதிலும் தான் அப்படியொன்றையும் கவனிக்கவில்லையென்று உறுதியாகக் கூறினார். ஆனால், பின்பு அவைகள் பற்றிய உண்மைகள் நீதிமன்றத்தில் வெளியானபின்பு ‘தான் அச்சமயத்தில் சரியான முறையில் கவனமெடுக்காததற்கும், பாதிக்கப்பட்டதாகக் கூறியவர்களைவிட பாதிரியார்களை அதிகம் நம்பியதற்கும்,’ பகிரங்கமாக மன்னிப்புக் கேட்பதாகத் தெரிவித்தார்.
ஜோர்ஜ் பெல்லை வத்திக்கானில் கார்டினலாக்கி பொருளாதாரப் பிரிவின் உயரதிகாரியாகப் பாப்பரசர் பிரான்சிஸ் நியமித்தபோதும் பல விமர்சனங்கள் எழுந்தன. பாப்பரசர் தான் திருச்சபைக்குள் நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு முதல் எதிரி என்று கூறிக்கொண்டபோதிலும் இதேபோன்று குற்றஞ்சாட்டப்பட்ட சிலருக்கு திருச்சபையின் வேறு இடங்களில் முக்கிய பதவிகளைக் கொடுத்திருப்பதைப் பலரும் சுட்டிக்காட்டினர்.
ஆஸ்ரேலிய நீதிமன்றத்தில் வழக்கின் முதல் நாளில் தன்னைச் சுற்றவாளி என்று சொல்லிக்கொண்டார் ஜோர்ஜ் பெல். பாப்பரசர் பிரான்சிஸ் இதுவரை ஜோர்ஜ் பெல் பற்றிய அறிக்கை எதுவும் விடவில்லை. தற்போதைய நிலையில் ஜோர்ஜ் பெல் வத்திக்கானின் வேலையில் இருந்து தற்காலிக விடுதலையில் உள்ளார் என்று மட்டும் தெரிவிக்கப்படுகிறது.