பாப்பரசரை மன்னிப்புக் கோரச்சொல்கிறது கனடா
கத்தோலிக்க திருச்சபை கனடா பூர்வகுடிகளின் பிள்ளைகளைக் குடும்பங்களிலிருந்து பறித்து பாலியல் குற்றங்கள் நடக்கும் உண்டுறை பாடசாலைகளில் சேர்த்து அதனால் அவர்கள் அங்குள்ளவர்களின் பாலியல் இச்சைகளுக்குப் பலியானதற்காக பாப்பரசர் பிரான்சீஸ் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று கோரும் பிரேரணை ஒன்று கனடியப் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
அப்படியான பாடசாலைகளில் முதலாவது 1874 இல் ஆரம்பிக்கப்பட்டது. அப்பாடசாலைகளில் சுமார் 150 000 செவ்விந்திய, மெத்திஸ், இனுஇட் பழங்குடியினரின் பிள்ளைகளைக் கத்தோலிக்க திருச்சபை சேர்த்தது. அவர்கள் குறிப்பிட்ட குடும்பங்களிடமிருந்து “பெரும்பான்மைச் சமூகத்துடன் கலப்பதற்கு” என்று கட்டாயமாகப் பிரிக்கப்பட்டவர்கள்.
2015 இல் கனடாவில் கத்தோலிக்க திருச்சபையின் அமைப்புக்குள் நடந்த பாலியல் குற்றங்கள் பற்றி விசாரித்த குழுவினரின் முடிவுப்படி பாப்பரசர் நடக்கவேண்டும் என்று பாராளுமன்றம் வெளியிட்ட அறிக்கை கோருகிறது.
அவ்விசாரணைக் குழு சுமார் 7000 முன்னாள் மாணவர்களிடையே விசாரித்து அப்பாடசாலைகளில் நடந்த பாலியல் குற்றங்கள், உடலை வாட்டும் தண்டனைகள் பற்றி அறிந்துகொண்டனர்.
கனடியப் பிரதமர் ஜஸ்டின் பாப்பரசர் அக்குடும்பங்களிடம் மன்னிப்புக் கேட்காதது தனக்கு ஏமாற்றமாக இருக்கிறது என்று தெரிவிக்கிறார்.
“கனடிய மேற்றாணிமார்கள் மற்றும் விபரமறிந்தவர்களுடன் ஆலோசித்தபின் கனடாவில் அக்குடும்பங்களுக்கு நடந்தவைக்கு பாப்பரசர் பொறுப்பெடுக்க வேண்டியதில்லை,” என்று கனடிய மேற்றிராணியார்கள் குழு பகிரங்கமாகத் தெரிவிக்கிறது.