தெற்காசிய விளையாட்டு – வட மாகாண வீரர் நான்காமிடம்
நடைபெற்று முடிந்த தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் வடமாகாணத்திலிருந்து பங்கு பற்றிய ஒரே ஒரு வீரரான பிரகாஷ்ராஜ் இறுதிவரை சளைக்காமல் தன் போட்டித்திறனையும் மெய்வல்லுனர் ஆளுமையையும் தெற்காசிய மட்டத்தில் வெளிப்படுத்தியுள்ளார். தட்டெறிதல் போட்டியில் நான்காமிடத்தை பெற்ற பிரகாஷ்ராஜ் வட மாகாண வீரராக இன்னொரு நிலை தாண்டி தன் திறமையை பதிவு செய்துள்ளார்.
இந்தியாவின் வீரர் அஜே 50.11m தூரம் எறிந்து தங்க பதக்கம் பெற்றிருந்தார்.அத்துடன் இரண்டாவது இடம் வெள்ளிப்பதக்கத்தை இலங்கையின் ஹேஷான் 47.37 m தூரம் எறிந்து பெற்றுக்கொள்ள மூன்றாம் இடம் வெண்கல பதக்கத்தை ஆஸிஸ் 46.52 m தூரம் எறிந்து பெற்றுக்கொண்டனர்.
நான்காமிடம் பெற்ற வட மாகாண வீரர் பிரகாஷ்ராஜ் 44.11 m தூரம் எறிந்து தன் சாதனையை தெற்காசிய மட்டத்தில் நிலைநாட்டியுள்ளார்.இவர் பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரகாஷ்ராஜின் சாதனை போல மேலும் பல சாதனைகள் உலகமட்டத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று கருத்து வெளியிட்ட பல விளையாட்டு ஆர்வலர்கள் அதற்கான ஆளுமை மிக்க பயிற்சிகளின் அவசியம் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தட்டெறிதலில் பிரகாஷ்ராஜின் திறன் உலக வீரர்களுக்கு நிகராக இருப்பதை அவதானிக்க கூடியதாக இருப்பதாக குறிப்பிடும் மெய்வல்லுனர் விளையாட்டு ஆர்வலர்கள் அவரின் இந்த சாதனை கூட சரியான பொருளாதார வளத்தோடு ஆளுமை மிக்க பயிற்சி கிடைப்பின் அவர் மேலும் சாதித்திருக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.தற்போது அகில இலங்கைரீதியில் கடந்த ஆண்டுகளில் வெற்றி சாதனையை பதிவு செய்த ஹரிகரனின் இலவசமான சேவை நோக்கு கொண்ட பயிற்சியிலேயே இந்த சாதனையை பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.