கிரிக்கெட் பந்தயத்தின் முடிவைத் திட்டமிடுவதில் லஞ்சம்
அல்-ஜஸீராவின் ஆழாராய்வு பத்திரிகையாளர் குழு காலி சர்வதேச மைதானத்தின் உப முகவரொருவர் லஞ்சம் பெற்றுக்கொண்டு ““துடுப்பெடுத்தாடுபவருக்குச் சாதகமாகவோ, பந்து வீசுவதற்குச் சாதகமாகவோ விளையாட்டு மைதானத்தை என்னால் தயார்ப்படுத்த முடியும்,” என்று சொல்வதைக் கையும் களவுமாகப் பிடித்திருக்கிறது.
மிக உயர்ந்த தரப் கிரிக்கெட் போட்டிகளான இந்தியா – சிறீ லங்கா, சிறீ லங்கா – ஆஸ்ரேலியா ஆகியவைக்கிடையே 2016 இல் நடந்த பந்தயங்களையே இப்படியாகத் திட்டமிட்டு குறிப்பிட்ட பக்கத்தை வெல்லவைத்தது தெரியவந்திருக்கிறது.
அல்-ஜஸீரா குழுவினர் இரகசியக் காமராவை வைத்து மும்பாயைச் சேர்ந்த பந்தயங்களின் முடிவுகளை ஒழுங்குசெய்யும் ரொபின் மொறிஸ் என்பவர் காலி மைதானத்தின் உப முகவர் தரங்க இண்டிகாவுடன் விபரங்களைப் பேசுவதைப் படம் பிடித்து வெளியிட்டிருக்கிறது. அதே சமயத்தில் இவ்வருட இறுதியில் நடக்கவிருக்கும் சிறீ லங்கா – பிரிட்டன் பந்தயத்தின் முடிவை நிர்ணயம் செய்வது பற்றியும் அவர்கள் சம்பாஷிக்கிறார்கள்.
தான் செய்யவிருக்கும் நடவடிக்கைகளுக்காக பந்தய வருமானத்தில் 30 விகிதத்தைக் கேட்கிறார் தரங்க இண்டிகா. அவர் எப்படி மைதானத்தைப் பந்தயத்துக்கு முன்பு தன் விருப்பத்துக்கு ஏற்றபடி தயாரிக்கிறார் என்பதையும் அல்-ஜஸீரா குழு விளக்குகிறது.
சர்வதேச கிரிக்கட் குழுமத்துக்கு இதுபற்றிய விபரங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன. அவர்கள் இதுபற்றிய ஆராய்வு நடத்தவிருப்பதாக அறிவிக்கிறார்கள்.