பங்களாதேஷில் போதை மருந்துகளுக்கெதிரான போர்.
பிலிப்பைன்ஸில் நடப்பதுபோல நடாத்தப்படும் போதைப்பொருட்களுக்கு எதிரான அரச வேட்டையில் கடந்த இரண்டு வாரங்களில் 100 க்கு அதிகமான போதை மருந்து விற்பவர்கள் கொல்லப்பட்டதுடன் ஆயிரக்கணக்கணக்கானோர் கைது செய்யப்பட்டிருப்பதாக பங்களாதேஷ் பொலீஸ் தெரிவிக்கிறது.
15.06 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கைகளில் சுமார் 12, 000 பேர் கைதுசெய்யப்பட்டு வெவ்வேறு நீதிமன்றங்களில் ஆஜராக்கப்பட்டு ஒரு வாரம் முதல் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக நாட்டின் உள்விவகார அமைச்சர் அஸாதுஸ்மான் கான் தெரிவிக்கிறார்.
கொல்லப்பட்டவர்கள் பற்றிய விமர்சனங்கள் மனித உரிமைக் குழுக்களால் எழுப்பப்பட்டிருக்கின்றன. “பொலீசுடன் துப்பாக்கிப் போரில் ஈடுபட்டபோதே அவர்கள் கொல்லப்பட்டனர். துப்பாக்கிகளை வைத்து, போதைப் பொருட்களை விற்கும் விபாரிகளே அவர்கள்,” என்று பதிலளிக்கிறார் அமைச்சர்.
போதைப் பொருள் வியாபாரத்தை அழிக்க ஒரு பிரத்தியேகக் குழு பிரத்தியேக அதிகாரங்களுடன் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களது நடவடிக்கைகள் தொடரும் என்று தெளிவாகக் கூறுகிறார் அமைச்சர் அஸாதுஸ்மான் கான்.