கிளிநொச்சி மக்களின் ஏற்பாட்டில் மாபெரும் ஒன்று கூடல்
பிரித்தானியா வாழ் கிளிநொச்சி மாவட்ட மக்களால் கடந்த 2011 ம் ஆண்டு முதல் வெற்றிகரமாக நடாத்தப்பட்டுவரும் kilipeople என்ற அமைப்பினரால் மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
லண்டனில் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்வில் 1000 விருந்தினர்களின் பங்களிப்புடன் சிறப்புறவிருப்பாதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் மார்ச் மாதம் 2ம் திகதி நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்து இப்போது யாழ் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்திய கலாநிதி திரு சத்தியமூர்த்தி அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.தொடர்ந்தும் தன் பங்களிப்புகளை பிரதேச கல்வி அபிவிருத்திகளுக்கு வழங்கியவண்ணம் தொழிற்படும் வைத்திய கலாநிதி அவர்களின் இந்த வருகை முக்கியத்துவமானதாக அமைகிறது.
போர் மௌனிக்கப்பட்டதன் பின்னரான காலப் பகுதியில் தாயக மீள் எழுச்சிக்காக இயங்கும் பல அமைப்புக்களோடு கிளிநொச்சி மாவட்ட அமைப்பு தனித்துவமான தன் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி அம்மக்களின் அடிப்படை தேவைகளான கல்வி,பொருளாதார மேம்பாடு,மருத்துவ உதவி,சுய தொழில் முயற்சி போன்றவற்றில் முக்கியமான கரிசனையை வெளிப்படுத்திவருகின்றது.
அதனடிப்படையில் மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகளை வழங்க முன்வந்து இந்த ஒன்று கூடல் ஹரோ பகுதியில் அமைந்துள்ள மண்டபத்தில் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.