மலேசிய வனத்தில் 3,000 க்கும் அதிகமாக இருந்த புலிகளின் எண்ணிக்கை 150 ஆகக் குறைந்திருக்கிறது.
கடந்த சுமார் 75 வருடங்களின் முன்பு 3,000 லிருந்து 150 ஆகக் குறைந்துவிட்ட காட்டுப் புலிகள் மலேசியாவில் விரைவில் முற்றாகவே அழிந்துவிடுமா என்று சஞ்சலப்படுகிறார்கள் சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள். இதுபற்றிய எச்சரிக்கை சில வருடங்களுக்கு முன்னரே சுட்டிக்காட்டப்பட்டும் மலேசிய அரசு அதைத் தடுக்க எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லையென்று அவர்கள் குறைப்பட்டுக்கொள்கிறார்கள்.
சர்வதேச ரீதியிலும் காட்டுப்புலிகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்திருக்கிறது. சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் சுமார் 100,000 ஆக இருந்த அவைகளின் தற்போதைய எண்ணிக்கை சுமார் 3,200 மட்டுமே என்று கணிக்கப்படுகிறது.
மலேசியா உட்பட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளின் அரசியல் ரீதியாக எந்தவித ஆர்வமும் காட்டப்படாததாலேயே காட்டுப் புலிகள் கடந்த பத்து வருடங்களில் அழியும் வேகம் அதிகமாகியிருக்கிறது என்கிறார் மலேசியாவின் அழிந்துவரும் காட்டு விலங்குகளைப் பேண நியமிக்கப்பட்டிருக்கும் உயரதிகாரி மார்க் தர்மராஜ். மலேசியக் காடுகளில் புலி வேட்டையாடுபவர்களைப் பிடித்துத் தண்டிக்க இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தாலும் அவ்விலங்குகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைகிறது என்கிறார் அவர். கொரோனாக் கட்டுப்பாடுகளால் கடந்த இரண்டு வருடங்களின் பயணத்தடைகள் காட்டுப் புலிகளின் பாதுகாப்புக்கு ஓரளவு உதவியிருக்கிறது என்கிறார் அவர்.
சாள்ஸ் ஜெ. போமன்