தனது கடலெல்லைக்குள் அகதிகளுடன் தத்தளிக்கும் படகை நாட்டுக்குள் விட இந்தோனேசியா மறுத்து வருகிறது.

மலேசியாவை நோக்கிச் செல்லும் வழியில் படகில் ஓட்டை விழுந்து, இயந்திரமும் உடைந்துவிட்டதால் இந்தோனேசியக் கடலெல்லைக்குள் அகதிகளுடன் ஒரு படகு மாட்டிக் கொண்டிருக்கிறது. மியான்மாரில் அரசால் வேட்டையாடப்படும் ரோஹின்யா இனத்தவர் 120 பேர் அப்படகில் இருக்கிறார்கள்.

இந்தோனேசியாவின் அச் தீவின் கடல் பிராந்தியத்தினுள் செவ்வாயன்று முதல் அந்த அகதிகள் கப்பல் தத்தளிப்பதாக அப்பகுதி மீனவர்கள் கவனித்தார்கள். அக்கப்பலைச் சர்வதேசக் கடலுக்குள் தள்ளிச் செலுத்திவிடப்போவதாக இந்தோனேசிய அரசு புதனன்று தெரிவித்தது. அச் பகுதி மீனவர்கள் அகதிகளுக்கு உணவும், உதவிகளும் கொடுத்து இயந்திரத்தைப் பழுதுபார்த்துத் தேவையான எரிபொருளையும் கொடுக்கவிருப்பதாகக் குறிப்பிட்டார்கள்.

கடுமையான கடலில் உடைந்துவிட்ட அக்கப்பல் கவிழ்ந்து சகலரும் இறக்கும் அபாயமுண்டு என்று ஐ.நா-வின் அகதிகள் அமைப்பு சுட்டிக்காட்டி, அவர்களை இந்தோனேசியாவில் இறங்க அனுமதிக்கும்படி கேட்டிருக்கிறது. ஆனால், இந்தோனேசியா அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

தனது நாட்டுக்குள் அகதிகளுக்கு மறுவாழ்வு கொடுக்கும் ஒப்பந்தத்தில் கையொப்பமிடாத நாடு இந்தோனேசியாவாகும்.

ஏற்கனவே சுமார் 28 நாட்களாக அந்தப் படகு கடலில் அலைந்துகொண்டிருக்கிறது. ரோஹின்யா அகதிகள் கடந்த சில ஆண்டுகளாகவே மியான்மார் அரசால் திட்டமிட்டு விரப்பட்டட்டும், கொல்லப்பட்டும் வருவதாகப் பல நாடுகளும், ஐ.நா-வும் குற்றஞ்சாட்டி வருகிறது. அவர்களில் ஒரு சாராருக்கு பங்களாதேஷ் உறைவிடம் கொடுத்திருக்கிறது. 

மலேசியாவை நோக்கியே பல ரோஹின்யா அகதிகள் கடல்வழியில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அங்கே நல்வாழ்வு கிடைக்கும் என்று ஏமாற்றி மனிதக் கடத்தல்காரர்கள் மோசமான கப்பல்களில் அவர்களை ஏற்றி அனுப்புவதாகக் குறிப்பிடப்படுகிறது. மலேசியாவில் அவர்கள் சுதந்திரமின்றியே வாழ்கிறார்கள். நாட்டுக்குள் நுழைந்தவுடன் அவர்களை மலேசிய அரசு தடுப்பு முகாம்களில் தங்கவைத்து வருகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்