நோர்த்வோல்ட் நிறுவனம் வாகனங்களுக்கான தனது முதலாவது மின்கலத்தைத் தயாரித்திருக்கிறது.

சுவீடன் நாட்டின் வடக்கிலிருக்கும் ஷெலப்தியோ நகரில் இவ்வருட ஆரம்பத்தில் தனியார் வாகனங்களுக்கான மின்கலங்களைக் கண்டுபிடித்துத் தயாரிக்கும் மிகப் பெரும் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அவர்களது ஆராய்ச்சியின் விளைவாக முதலாவது மின்கலம் தயாரிக்கப்பட்டுவிட்டதாக அந்த நிறுவனத்தின் நிர்வாகி பிரடரிக் ஹேத்லுண்ட் தெரிவித்தார்.

நோர்த்வோல்ட் நிறுவனத்தின் புதிய தொழில்நுட்பத்தின் கனியாகியிருக்கும் முதலாவது மின்கலமானது சில வருடங்களுக்கு முன்னர் வரை பாவிப்பிலிருந்த வி.எச்.எஸ் கசெட் அளவிலான சுமார் 500 கிராம் எடையுள்ள மின்கலமாகும். 2022 ம் ஆண்டில் இந்த நிறுவனம் தனது முதலாவது கட்டத் தயாரிப்பை ஆரம்பித்துக் கொள்வனவுக்காக மின்கலங்களை விற்பனைக்கு அனுப்பும் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இரண்டே வருடங்களில் மின்சாரத்தினால் இயங்கும் சுமார் 300,000 வாகனங்களுக்கான மின்கலங்களை நோர்த்வோல்ட் தயாரித்து விற்பனைக்கு அனுப்பும். 

வொல்வோ நிறுவனத்துடன் கூட்டுச்சேர்ந்து சுவீடன் அரசு, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவைகளின் ஆதரவுடன் செயற்படும் நோர்த்வோல்ட் சுவீடனில் மேலும் இரண்டு மின்சார வாகனங்களுக்கான தொழிற்சாலைகளையும், ஐரோப்பாவின் வேறு நாடுகளில் மேலும் மூன்று தொழிற்சாலைகளையும் கட்டத் திட்டமிட்டிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்