ஐரோப்பாவின் “ஓடித்திரியும் தொழிலாளிகளுக்கும்” தொழிலாளர் உரிமைகள் கொடுக்கப்படவிருக்கின்றன.

இணையத்தளச் சந்தையில் பதிந்தால் எமக்கு மலிவு விலையில் கேட்டதைக் கொண்டுவந்து கொடுக்கும் கடை நிலைத் தொழிலாளர்கள்  ஐரோப்பிய ஒன்றியத்தின் தொழிலாளர் உரிமைகளை இதுவரை பெற்றிருக்கவில்லை. காரணம் ஊபர், டெலிவாரோ போன்ற நிறுவனங்கள் தங்களுக்காக வேலை செய்பவர்களைத் தம்மிடம் தொழிலாளிகளாகப் பதிந்துகொள்ளாமல் அவரவரையே தத்தம் முதலாளிகள் என்கிறது. அந்த நிலையை மாற்றும் சட்டங்களை அறிமுகப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் தயாராகிறது.

வியாழனன்று வெளியாகியிருக்கும் விபரங்களின்படி இணையத்தள நிறுவனங்கள் தாமாகவே தமக்காக வேலை செய்பவர்களுக்கான முதலாளிகளாக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. சாதாரணமான ஒரு ஐரோப்பிய ஒன்றியத் தொழிலாளிக்குக் கொடுக்கவேண்டிய உரிமைகள் அந்தத் தொழிலாளிகளுக்கும் கொடுக்கப்படவேண்டும் என்பது கட்டாயமாகும்.

ஐரோப்பிய ஒன்றியத்தினுள் சுமார் 500 இணையத்தள நிறுவனங்கள் தமக்காக வேலைசெய்பவர்களைத் தொழிலாளராகப் பதிவுசெய்யாமல் இயங்கிவருகின்றன. அந்த நிறுவனங்களின் வருமானம் 2016 இல் 3 பில்லியன் எவ்ரோக்களாக இருந்து 2020 இல் சுமார் 14 பில்லியன் எவ்ரோவாக அதிகரித்திருக்கின்றன. 

அத்தொழிலாளர்களின் வேலை நேரம் அதிகமானது, உடல் உபாதைகளையும் அனுபவிக்கும் அவர்களுக்கு வருடாந்தர விடுமுறையோ, வேலையிழந்தால் உதவித் தொகையோ கிடையாது. gig பொருளாதாரத் துறையென்று அழைக்கப்படும் அவற்றின் ஆதரவாளர்களோ, அத்துறைத் தொழிலாளர்கள் சுதந்திரமாக இருக்கலாம், இஷ்டப்படி, இஷ்டப்பட்ட இடத்தில் வேலை செய்துகொள்ளலாம் என்று சாதிப்பதுண்டு. 

ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவரவிருக்கும் தொழிலாளர் சட்டத்திருத்தங்கள் சுமார் 4.1 மில்லியன் “ஓடித்திரியும்” சேவையாளர்களுக்கு உரிமைகளைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்