ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்திராத சுவிர்ஸலாந்தும் தனது எதிரி நாடுதான் என்று பிரகடனம் செய்தது ரஷ்யா.
திங்களன்று ரஷ்யா வெளியிட்ட அறிக்கையில் சுவிஸும் ஒரு எதிரி நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், அமெரிக்கா, கனடா, ஐக்கிய ராச்சியம், ஆஸ்ரேலியா, ஜப்பான், நியூசிலாந்து ஆகியவற்றை ரஷ்யா தனது எதிரி நாடுகள் என்ற பட்டியலில் சேர்த்திருக்கிறது. ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடை போன்றவற்றை அமுலுக்குக் கொண்டுவந்திருக்கும் நாடுகளையே ரஷ்யா அந்தப் பட்டியலில் சேர்த்திருக்கிறது.
எந்த ஒரு அணியிலும் சேராமலிருந்து வரும் நாடான சுவிஸ் தன்னை ஒரு “நடு நிலை நாடு,” என்றே குறிப்பிட்டு வந்திருக்கிறது. சமீபத்தில் உலக நாடுகள் பலவற்றால் ரஷ்யாவுக்கு எதிராக அறிவிக்கப்பட்டிருக்கும் தடைகளில் சுவிஸ் சேர்ந்ததை அடுத்து அதன் “நடுநிலைத்தனம்” கேள்விக்குள்ளாகியிருக்கிறது.
“எந்த ஒரு ஆயுதப் போரிலும் ஈடுபடாமல், எந்த ஒரு ஆயுதந்தாங்கிய அணியையும் சேர்ந்திராமல் இருப்பது “நடு நிலைத்தனம்” ஆகும். அதை எப்போதுமே அரசியல்சட்ட ரீதியில் சுவிஸ் தொடர்ந்து அனுசரித்து வருகிறது,” என்று தனது நாட்டின் அரசியல் நிலைப்பாட்டை விளக்குகிறார், ஒலிவர் டிக்கல்மான் என்ற சுவிஸ் சட்டவியலாளர்.
“மேற்கத்தைய நாடுகள் ரஷ்யா மீது போட்டிருக்கும் தடைகள் போர் தொடுத்ததற்கு ஈடானது,” என்று புத்தின் அறிவித்திருப்பதை, சுவிஸ் நாட்டின் ஜனாதிபதி இக்னேசியோ காஸிஸ் புறக்கணித்திருக்கிறார்.
“சுவிர்ஸலாந்து, ரஷ்யாவுடன் போரில் ஈடுபட்டிருக்கவில்லை,” என்கிறார் ஜனாதிபதி இக்னேசியோ காஸிஸ்.
சாள்ஸ் ஜெ. போமன்