ஐரோப்பாவில் முதலாவதாக கொவிட் 19 கட்டாயத்தை அறிமுகப்படுத்திய ஆஸ்திரியா அதை வாபஸ் பெற்றது.
கொவிட் 19 தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் கட்டாயம் என்ற சட்டத்தை உலகில் அறிமுகப்படுத்திய ஒருசில நாடுகளில் ஆஸ்திரியா முக்கியமானது. ஐரோப்பிய நாடுகளில் அச்சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்திருக்கும் ஒரேயொரு நாடும் ஆஸ்திரியாவே. துருக்மேனிஸ்தான், இந்தோனேசியா, தாஜிக்கிஸ்தான் ஆகியவையே கொவிட் 19 தடுப்பூசியைக் கட்டாயமாக்கியிருக்கும் மற்றைய நாடுகளாகும்.
பெப்ரவரி மாதத் தொடக்கத்தில் அதை அறிமுகப்படுத்திய ஆஸ்திரியா கொவிட் 19 முன்பு போல ஆபத்தானதாக இல்லை என்று காரணம் தெரிவித்து அச்சட்டத்தை வாபஸ் பெறுவதாக இன்று அறிவித்தது. தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு 3,600 எவ்ரோ அபராதம் என்ற சட்டம் இன்னுமொரு வாரத்தில் ஆஸ்திரியாவில் நடைமுறைப்படுத்தப்படவிருந்தது.
தடுப்பூசி கட்டாயமில்லை என்பதை அறிவித்த ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஆஸ்டிரிய அமைச்சர் கரோல்ன் எஸ்டாட்லர், தான் நாட்டின் மக்கள் ஆரோக்கிய அமைச்சருடன் ஆலோசனையின் பேரில் அச்சட்டங்களை வாபஸ் பெறுவதாகத் தெரிவித்தார்.
கடந்த நவம்பர் மாதம் ஆஸ்திரியா கட்டாயத் தடுப்பூசிச் சட்டத்தை அறிவித்ததிலிருந்து வாராவாரம் பல்லாயிரக்கணக்கானோர் அதை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும் நடத்தி வந்தார்கள். தடுப்பூசிகள் கட்டாயம், இல்லையேல் தண்டம் என்ற சட்டம் வருவதை எதிர்நோக்கியும் கடந்த வாரங்களில் தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கை நாட்டில் அதிகரிக்கவில்லை. நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொண்டோர், கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தோர் சனத்தொகையில் 70 விகிதமானோர் மட்டுமே என்று குறிப்பிடப்படுகிறது.
2020 இல் கொவிட் 19 பரவ ஆரம்பித்ததிலிருந்து ஆஸ்திரியாவில் சுமார் 3 மில்லியன் பேர் அதனால் பாதிக்கப்பட்டுச் சுமார் 15,000 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். நாட்டின் சனத்தொகை சுமார் 9 மில்லியன் ஆகும்.
சாள்ஸ் ஜெ. போமன்