ரஷ்யாவிலிருந்து எரிபொருள் வாங்குவதில்லையென்று முடிவெடுத்து ஐரோப்பாவுக்கு மன உளைச்சல் கொடுத்த ஜோ பைடன்.

உக்ரேனுக்குள் தனது படைகளை நகர்த்திய நாள் முதல் உக்ரேன் ஜனாதிபதி வேண்டிவந்த மேலுமொரு நகர்வை செவ்வாயன்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்டார். ரஷ்யாவின் முக்கிய விற்பனைப் பொருட்களான எரிபொருட்களை இனிமேல் அங்கிருந்து வாங்குவதில்லை என்று அவர் அறிவித்தார். எரிநெய் மட்டுமன்றி நிலக்கரி, எரிவாயு ஆகியவையையும் ரஷ்யாவிலிருந்து இனிமேல் அமெரிக்கா கொள்வனவு செய்யப்போவதில்லை. 

கடந்த வாரத்தில் தான் வெனிசுவேலாவின் ஜனாதிபதி மதூரோ தனது நாடு  உலகத் தேவைக்கான எரிபொருட்களை விற்கத் தயார் என்றும், அதற்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கோரிவந்தபடி தனது நாட்டின் எதிர்க்கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பித்து நாட்டின் அரசியல், பொருளாதார நிலைமையைச் சீர்செய்யத் தயார் என்று அறிவித்திருந்தார். அதையடுத்து வார இறுதியில் அமெரிக்க அதிகாரிகள் வெனிசுவேலாவுக்கு விஜயம் செய்தது பகிரங்கமானதுமே அமெரிக்காவின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்பதும் கணிக்கப்பட்டது. https://vetrinadai.com/after-us-officials-visit-to-venezuala-its-leader-wants-to-resume-talks-with-the-opposition/

தான் எடுத்த முடிவை பத்திரிகையாளர்களிடையே வெளியிட்ட ஜனாதிபதி தமது நட்பு நாடுகளும் அதே முடிவை எடுக்கவேண்டுமென்று அறைகூவினார். அதையடுத்து ஐக்கிய ராச்சியத்தின் பிரதமர் தனது நாடு 2022 ம் ஆண்டின் இறுதியில் ரஷ்யாவிலிருந்து எரிசக்தியைக் கொள்வனவு செய்வதை நிறுத்தும் என்று அறிவித்தார். அமெரிக்காவும், ஐக்கிய ராச்சியமும் தமது எரிபொருள் கொள்வனவில் தலைக்கு 8 விகிதத்தையே ரஷ்யாவிலிருந்து கொள்வனவு செய்கின்றன.

ரஷ்யப் பொருளாதாரத்தின் கழுத்தை நெரிக்க அமெரிக்காவும், ஐக்கிய ராச்சியமும் அறிவித்த அந்த நகர்வானது ஐரோப்பிய ஒன்றியத்துக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவ்விரண்டு நாடுகளைப் போலன்றி ஐரோப்பிய ஒன்றியம் பெருமளவில் ரஷ்யாவிலிருந்து கொள்வனவு செய்யும் எரிநெய், எரிவாயு ஆகியவற்றில் தங்கியிருக்கிறது. முக்கியமாக ஜேர்மனியும், இத்தாலியும் தமக்குத் தேவையான எரிபொருட்களில் பெரும்பகுதியைத் தொடர்ந்தும் ரஷ்யாவிடமிருந்தே கொள்வனவு செய்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியம் இவ்வருட இறுதியில் தான் ரஷ்யாவிலிருந்து கொள்வனவு செய்யும் எரிபொருட்களின் அளவை மூன்றிலிரண்டு பங்கால் குறைக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது. அதைத் தொடர்ந்து 2030 இல் ரஷ்யாவிலிருந்து கொள்வனவு செய்வதை முழுவதுமாக நிறுத்துவதாகக் குறிப்பிடுகிறது. அமெரிக்கா, கத்தார் மற்றும் வேறு இடங்களிலிருந்து கொள்வனவு செய்யும் எரிபொருளின் அளவை 30 விகிதத்தால் இவ்வருடத்துக்குள் அதிகரிக்கவிருக்கிறது.

சவூதி அரேபியா மட்டுமே ரஷ்யாவை விட அதிகமான அளவில் எண்ணெயை விற்கும் ஒரேயொரு நாடாகும். தனது பொருளாதாரத்தின் பெரும்பகுதிக்கு எண்ணெயில் தங்கியிருக்கும் நாடு ரஷ்யா. தம்மிடமிருந்து எண்ணெய்க் கொள்வனவு செய்வதை ஐரோப்பிய நாடுகள் நிறுத்துமானால் குளாய் மூலமாக ஜேர்மனிக்கு விற்கப்படும் எரிவாயுவை நிறுத்துவதாக ரஷ்யா எச்சரித்திருந்தது.

இரண்டு வாரங்களில் சுமார் 30 விகிதத்தால் உயர்ந்திருக்கும் எண்ணெயின் சர்வதேச விலை ஜனாதிபதி ஜோ பைடனின் அறிவிப்பையடுத்து மேலும் 5 விகிதத்தால் அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவின் கொள்வனவாளர்களுக்கும் புதனன்று முதல் பெற்றோல், டீசல் விலைகள் கணிசமான அளவால் உயர்த்தப்பட்டிருக்கின்றன. ஆயினும், பெரும்பாலான அமெரிக்கர்கள் தமது ஜனாதிபதியின் முடிவை ஆதரிப்பதாகவே கணிப்புகள் தெரிவிக்கின்றன. 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *