இதுவரை கணிக்கப்பட்டதை விடக் குறைவான அளவு பனியே உலகின் பனிமலைகளில் மிச்சமிருக்கிறது.
இதுவரை புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கணித்ததை விடவும் எதிர்பார்த்ததை விடவும் குறைவான அளவு பனியையே உலகின் பனிமலைகள் கொண்டிருக்கின்றன என்பது நவீன கண்காணிப்புக் கருவிகள் மூலம் தெரியவந்திருக்கிறது. இந்தப் புதிய விபரங்கள் உலகின் காலநிலை மாற்றங்கள் பற்றிய ஆராய்ச்சிகளுக்குப் புதிய வெளிச்சத்தைக் காட்டியிருக்கிறது.
புதிய தொழில்நுட்பங்கள் மூலம் பனிமலையின் பரப்பில் பனி எவ்வளவு வேகமாக நகர்கிறது, நகரும் வேகம் என்ன, அப்பனிப் பிராந்தியத்தின் பருமன் என்ன போன்றவைகளை முன்னரை விடத் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது. அதற்கான அளவுகளை துணைக்கோள்கள் எடுக்கும் படங்கள் மூலம் விஞ்ஞானிகள் ஆராய்ந்திருக்கிறார்கள்.
புதிய கணக்குகளின்படி பனிமலைகள் தற்போதைய வேகத்தில் கரைவது தொடர்ந்தால் அவை கரைந்து முடிந்திருக்கும்போது உலகக் கடல் மட்ட உயர்வு முன்பு கணிக்கப்பட்டதை விட 3 அங்குலங்கங்கள் குறைவாக இருக்கும் என்று தெரியவருகிறது. அதே சமயம் பனிமலையிலிருந்து வரும் நீரால் உருவாகும் நீரோட்டங்களை நம்பி வாழும் சமூகங்களின் நிலைமை பாதிக்கப்படும்.
பனிமலைகளின் அளவு குறைவதால் நீரோட்டங்களில் நீரும் குறையும். அது அவர்களின் வாழ்வாதாரங்களைப் பாதிக்கும். ஏற்கனவே 2000 – 2019 வரை அந்த நீரோட்டங்களின் கொள்ளளவு 5.4 பில்லியன் கலன் நீரால் குறைந்திருக்கிறது. அந்த நிலைமையை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளைச் சில நாடுகள் ஏற்கனவே செய்ய ஆரம்பித்திருக்கின்றன.
தென்னமெரிக்காவில் பெரு தனது கடல்பரப்பிலிருக்கும் உப்பு நீரைச் சுத்திகரிப்பதில் முதலீடுகளைச் செய்து வருகிறது. பக்கத்து நாடான சிலே செயற்கையான முறைகளால் பனிமலைகளில் பனியின் கொள்ளளவை அதிகரிக்கும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்