ரஷ்ய அரசின் கட்டுப்பாட்டிலிருக்கும் தொலைக்காட்சியொன்றில் போருக்கு எதிரான சுலோகம்!
ரஷ்ய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் தொலைக்காட்சியின் செய்திகள் வாசிக்கப்பட்டபோது புத்தினால் உக்ரேன் மீது நடத்தப்படும் போருக்கு எதிரான சுலோகம் திடீரென்று திரையில் காட்டப்பட்டது. “விரேமியா” என்ற அந்த இரவு ஒன்பது மணிச் செய்தி Pervyj தொலைக்காட்சியில் காட்டப்பட்டபோதே மேற்கண்ட அசாதாரணமான சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
உக்ரேன் மீது நடாத்தப்படும் போரை ரஷ்யாவில் “போர்” என்று குறிப்பிடுவதே குற்றமாக்கப்பட்டிருக்கிறது. “குறிப்பிட்ட அளவிலான இராணுவ நடவடிக்கை” என்று மட்டுமே உத்தியோகபூர்வமாகக் குறிப்பிடப்படுகிறது. உக்ரேனியர்களை ஒரு சர்வாதிகாரி, நாஸி ஆட்சியிலிருந்து மீட்க ரஷ்ய இராணுவம் உதவி வருவதாக மட்டுமே குறிப்பிடப்படுகிறது. உத்தியோகபூர்வமாக அரசு குறிப்பிடும் விடயங்களைத் தவிர வேறெந்த வகையிலும் “குறிப்பிட்ட அளவிலான இராணுவ நடவடிக்கை” பற்றிப் பொதுவெளியில் குறிப்பிடுவது சுமார் 15 வருடங்கள் வரையிலான சிறைத்தண்டனையைக் கொடுக்கும் என்று ரஷ்யாவின் சட்டங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.
பெப்ரவரி 24 ம் திகதி ரஷ்யாவின் இராணுவம் உக்ரேனிய எல்லைக்குள் நுழைந்தது முதலே ரஷ்யாவின் வெவ்வேறு நகரங்களில் மக்கள் வெளியே வந்து அப்போரை எதிர்க்கும் ஊர்வலங்களையும், நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்கள். அப்படியான எதிர்ப்புகளில் ஈடுபட்டவர்கள் பல்லாயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரச நடவடிக்கைகளை விமர்சித்த ஊடகங்களின் இயக்கங்களும் முடக்கப்பட்டிருக்கின்றன.
இந்த நிலையில் அரசத் தொலைக்காட்சியிலேயே தைரியமாக ஒருவர் நாட்டின் போர் நடவடிக்கையைத் தோலுரித்துக் காட்டியிருப்பது சர்வதேசமெங்கும் கவனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. குறிப்பிட்ட தொலைக்காட்சியில் பணியாற்றும் மரீனா ஒவ்சியானிகோவா என்பவரே அதைச் செய்திருக்கிறார். செய்தியில் பெலாருசுடனான உறவுகளைப் பற்றி செய்தியாளர் எக்கத்தரீனா ஆந்திரேவா வாசிக்க ஆரம்பிக்கும்போது மரீனா ஒவ்சியானிகோவா கறுப்பு உடையுடன் செய்தியாளரின் பின்னால் சென்று “போரை நிறுத்துங்கள்” என்ற சுலோகத்துடனான விளம்பரத்தைப் பார்வையாளர்களுக்குக் காட்டினார். ஆங்கிலத்திலும், ரஷ்ய மொழியிலும் இருந்த அந்த விளம்பரத்தில், “பொய்களை நம்பாதீர்கள், இங்கே உங்களுக்குப் புளுகுகளையே சொல்கிறார்கள்,” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ரஷ்ய அரசின் போர்க்கட்டுப்பாடுகளை மீறிய ஒவ்சியானிகோவா கைது செய்யப்பட்டிருக்கிறார். “அடையாளம் தெரியாத ஒருவர் தொலைக்காட்சியில் தோன்றிய நிகழ்ச்சி பற்றி நிறுவனத்தின் உள்ளே ஒரு விசாரணை நடத்தப்படும்,” என்று தொலைக்காட்சியின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ போமன்