உங்கள் நெட்பிளிக்ஸ் சந்தாவை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்பவர்களுக்கான கட்டணம் அதிகரிக்கப்படுகிறது.
நெட்பிளிக்ஸ் நிறுவனத்தில் கணக்கு வைத்துக்கொண்டு அதை வேறு வீடுகளில் வாழும் நம்பர்கள், குடும்ப அங்கத்தினர்களுடனும் பகிர்ந்து கொள்பவர்கள் பலர். அப்படியாக வெவ்வேறு வீடுகளில் பகிரப்படக்கூடிய ஒரு புதிய சந்தாவை அறிமுகப்படுத்தவிருக்கிறது நெட்பிளிக்ஸ் நிறுவனம். இதை அந்த நிறுவனம் புதன் கிழமையன்று அறிவித்தது.
முதல் கட்டமாக கொஸ்டா ரிக்கா, சிலே, பெரு ஆகிய நாடுகளில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் அப்படியான ஒரு பங்குச்சந்தாதாரர் முறையை அறிமுகப்படுத்தி அது எப்படிச் செயற்படுகிறது என்பதைப் பரிசோதிக்கிறது. பங்குச்சந்தாக்காரருக்கான கட்டணம் தற்போது சுமார் 2, 3 டொலர்களாக இருக்கிறது. முதல் சந்தாதாரர் கட்டணம் ஒன்றைச் செலுத்த வேறு வீடுகளிலிருந்து பகிர்ந்து கொள்பவர்கள் இருவர் குறைந்த கட்டணத்துக்குப் பங்குதாரராக இருக்கலாம் என்பதே அந்த முறை.
ஸ்டிரீமிங் என்றழைக்கப்படும் நேரடியாக நிகழ்ச்சிகளைப் பார்க்கக்கூடிய துறையில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஆரம்பக்கட்டத்தில் தனிக்காட்டு ராஜாவாக இருந்தது. சமீப காலத்தில் வேறு பல சர்வதேச நிறுவனங்களும், உள்நாட்டு நிறுவனங்களும் அத்துறையில் போட்டியிட ஆரம்பித்துவிட்டதால் நெட்பிளிக்ஸ் தொடர்ந்தும் எதிர்பார்த்த வளர்ச்சி பெறவில்லை. அதனால் அந்த நிறுவனத்தின் பங்குகளின் விலை குறைவடைந்திருக்கிறது.
கடந்த வருட இறுதியில் நெட்பிளிக்ஸ் சந்தாதாரர்கள் 221.8 மில்லியன் பேர். அது அந்த நிறுவனத்தின் எதிர்ப்பார்ப்பை விடக் குறைவாக இருக்கிறது. அவ்வளர்ச்சிக்கு முக்கிய காரணம் சர்வதேச ரீதியில் உண்டாகிய கொரோனாக்கட்டுப்பாடுகள் என்பது வெளிச்சம். சமீபத்தில் நிறுவனம் தனது சந்தாத்தொகையை உலகெங்கும் உயர்த்தியிருக்கிறது.
தற்போது மூன்று நாடுகளில் பரீட்சிக்கப்படும் உப பங்குதாரர் முறையின் விளைவுகள் தெரிந்தபின், அது விரைவில் உலகெங்கும் விஸ்தரிக்கப்படும்.
சாள்ஸ் ஜெ. போமன்