வீணாகும் தண்ணீரை சேமிக்கப் பழகுவோம்| உலக தண்ணீர் தினம் இன்று|மார்ச் 22
உலக தண்ணீர் தினம்
தண்ணீரிலிருந்துதான் உலகில் உயிரின தோற்றின என அறிவியல் ஆராய்ச்சிகளில் கூறப்பட்டுள்ளது.
இன்று மனிதனுடைய அடிப்படைத் தேவைகளில் உணவு, உடை, இருப்பிடத்திற்கு அடுத்தபடியாக சுத்தமான குடிநீரும் அவசியம் என்பதை யாரும் மறுக்க முடியாது. அந்தளவுக்குத் தண்ணீரின் தேவை இன்றைக்கு அதிகரித்துள்ளது.
1993-ம் ஆண்டு முதல், மார்ச் 22-ம் தேதி உலக தண்ணீர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. இந்த 2022 ஆம் ஆண்டின் உலக தண்ணீர் தின கருப்பொருள் ”நிலத்தடி நீர் – கண்ணுக்குத் தெரியாததை காணக்கூடியதாக மாற்றுதல்” என்பதாகும்
2040-ம் ஆண்டில், உலகில் 4-ல் 1 குழந்தை தண்ணீர் பற்றாக்குறையில் அவதிப்படும் என்று எதிர்வுகூறப்படுகிறது. குறிப்பாக, இன்னும் இருபது ஆண்டுகளில் உலகில், 60 கோடி மக்களுக்கு கடும் தண்ணீர்ப் பற்றக்குறை பிரச்சனை ஏற்படும் என்று யுனிசெஃப் குறிப்பிடுகிறது.
உலகம் முழுவதும் 36 நாடுகளில், தீவிரமான தண்ணீர்ப் பிரச்னை இப்போதே நிலவிவருகிறது. முக்கியமாக, தென்னாசியாவிலேயே இந்தியக் கிராமப்புறங்களில் வசிக்கும் 6 கோடி மக்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
அவ்வாறாக உலக நாடுகளில் 40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.
குடிநீர் மாசுபடுவதாலும், வறட்சியாலும் எதிர்காலத்தில் உலகம் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது. எனவே, எதிர்கால தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு சந்திரன், செவ்வாய் கிரகத்தில் மனிதன் உயிர் வாழ முடியுமா, தண்ணீர் உள்ளதா என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.
குறிப்பாகடி சமீப காலங்களில் நிலத்தடி நீர் பற்றி வரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. நிலத்தடி நீரை உறிஞ்சுவது பெரிய பாதக விளைவுகளை எதிர்காலத்தில் ஏற்படுத்தும்.
பசுமைப் புரட்சி தொடங்கிய பிறகு, வீரிய ரக விதைகள், ரசாயன உரங்களோடு நிலையான நீர்ப்பாசனமும் தேவைப்பட்டது. ஆழ்குழாய்க் கிணறு தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட அபரிமித வளர்ச்சியால், 1990-க்குப் பிறகு நிலத்தடி நீரின் உபயோகம் பன்மடங்காக அதிகரித்தது. அதிக அளவு நிலத்தடி நீரை இவை உறிஞ்சுவதால், குறைந்த ஆழமுடைய கிணறுகளில் நீர் வற்றி அவை பயனற்றுப் போய்விட்டன என்பதும் முக்கியமான தகவல்.
குடிநீர் மற்றும் தொழில் துறைப் பயன்பாட்டுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக இருப்பதால், தொடர்ந்து அளவுக்கு அதிகமாகச் சுரண்டுவதைத் தடுக்கக் கடுமையான சட்டங்கள் கொண்டுவர வேண்டும்.
ஒவ்வொரு துளி மழை நீரையும் வீணடிக்காமல் வாய்க்கால்கள் மூலமாகக் ஏரி,குளங்களில் சேமித்து, நிலத்தடி நீர்ச் சுரப்பை அதிகரிக்க வேண்டும். மழை நீர்ச் சேமிப்புத் திட்டத்தை ஒவ்வொரு வீட்டிலும் முறையாக அமல்படுத்த வேண்டும். பயிர்களின் நீர்ப் பயன்பாட்டைக் கருத்தில் கொள்ளாமல் தற்போது பயிர்களுக்கு, குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படுகிறது.
நீர்ச் சுரண்டலைத் தடுக்க, குறைந்த நீர் தேவைப்படும் பயிர்களுக்கு அதிகவிலை அறிவிக்க வேண்டும்.
நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டியது, நீர் ஆதாரங்களை காக்க வேண்டியது, குடிநீர் மாசுபடாமல் இருக்க உதவுவது மக்களின் சமுதாய கடமையாகும். ‘தண்ணீர் மாசு படாமல் பாதுகாப்போம். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவோம். நீர்நிலைகளை பாதுகாப்போம். தண்ணீர் வீணாவதை தடுப்போம்’ என்ற உறுதிமொழியை உலக தண்ணீர் தினத்தில் முக்கியமாக எடுக்க வேண்டிய திடசங்கற்பம் ஆகும்.
எழுதுவது : டொமினிக் ராஜ்