கடந்த வருடத்தை விட 15 % மாசுபட்ட காற்றுடன் அதிக மாசுபட்ட உலகத் தலைநகராக மீண்டும் டெல்லி.

உலக நகரங்களின் சூழலில் நச்சுக்காற்று எவ்வளவு இருக்கிறது என்பதைக் கணக்கிட்டு வருடாவருடம் வெளியிடும் சுவிஸ் நிறுவனமான IQAir இன் புதிய அறிக்கை விபரங்களுடன் வெளியாகியிருக்கின்றன. அதன்படி சுவாசிக்கும் காற்றில் மனித ஆரோக்கியத்தைப் பாதிக்காமலிருக்க ஆகக்குறைந்த நச்சுக்காற்று என்ற எல்லையத் தாண்டாத எந்த ஒரு இந்திய நகரும் இல்லை. [உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு ஒரு நகரின் சூழலில் மனிதர்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்காமலிருக்க எந்த அளவு காற்று மாசுபடலாம் என்ற எல்லையை விதித்திருக்கிறது.]

அடுத்தடுத்து இரண்டாவது தடவையாக இந்தியாவின் தலைநகரான டெல்லி உலகின் அதி மாசுபட்ட சூழலைக் கொண்ட நகரம் என்ப்படுகிறது. கடந்த வருடத்தில் அந்த நகரின் காற்றிலிருந்த நச்சுத்தன்மை மேலும் 15 % ஆல் அதிகரித்திருப்பதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. வட இந்திய நகரங்கள் அனைத்திலுமே மாசுபட்ட காற்றின் அளவு உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பால் பரிந்துரை செய்யப்பட்ட அளவை விட 20 % அதிக நச்சுத்தன்மையைக் கொண்டிருக்கின்றன.

ராஜஸ்தானில் பிவாடி, உத்தர் பிரதேசத்தில் காஸியாபாத் ஆகிய நகரங்கள் உலகிலேயே அதிக மாசுபட்ட காற்றுள்ள நகரங்கள் என்ற முதலிரண்டு இடத்தையும் பெற்றிருக்கின்றன. சீன நகரமான ஷிங்ஷியாங் மூன்றாவது இடத்தையும், டெல்லி நான்காவது இடத்தையும் பெறுகின்றன உலகிலேயே அதிக மாசுபட்ட நகரங்கள் பட்டியலின் முதலாவது 100 நகரங்களில் 63 நகரங்கள் இந்தியாவில் இருக்கின்றன.

போக்குவரத்து, நிலக்கரி எரிக்கப்படுதல், குப்பைகள் எரித்தல், தொழிற்சாலைகளின் மாசுக்காற்று ஆகியவை குறிப்பிட்ட நகரங்களின் சூழலை மாசுபடுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கின்றன. மாசுபட்ட சூழலின் பக்க விளைவுகள் வருடாவருடம் இந்தியாவுக்குச் சுமார் 150 பில்லியன் டொலர் இழப்புக்களை ஏற்படுத்துகிறது. அவைகளால் மனிதர்களுக்கு ஏற்படும் ஆரோக்கியக் குறைபாடுகளோ அதை விட மோசமானது. நிமிடத்துக்கு 3 இறப்புக்கள் சூழல் மாசுபாடுகளால் ஏற்படுகின்றன என்று கணிக்கப்படுகின்றது.

வெளியாகியிருக்கும் அறிக்கையை இந்திய அரசு, “உண்மையான நிலைமையைச் சொல்லவில்லை, செயற்கைக் கோள்களால் அவதானிக்கப்பட்ட விபரங்களே,” என்று ஒதுக்கித் தள்ளியிருக்கிறது. இந்தியாவின் நகரங்களில் மிகக்குறைந்த மாசுபட்ட காற்றைக் கொண்ட நகரம் தமிழ்நாட்டின் அரியலூராகும். அதுகூட உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பால் அனுமதிக்கப்பட்ட மாசு அளவைவிட மூன்று மடங்கு அதிக மாசுபாட்டைக் கொண்டது. 

முன்பு சூழல் மாசுபாடுகளை அதிகமாகக் கொண்டிருந்த சீனாவின் நகரங்கள் படிப்படியாகச் சுத்தமடைந்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. நிலக்கரி எரித்தலைக் குறைத்தல், போக்குவரத்துக் கட்டுப்பாடுகள், மாசு அளவீடுகள் செய்து வேகமாக நடவடிக்கைகள் எடுத்தல் ஆகிய நடவடிக்கைகளால் சீனா தனது நாட்டில் சுத்தமாக சூழலை உண்டாக்கி வருகிறது. 

சாள்ஸ் ஜெ. போமன்   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *