பதிப்பிக்கக் காகிதத்தட்டுப்பாடு ஏற்பட்டதால் இரண்டு தினசரிப் பத்திரிகைகள் இன்று சிறீலங்காவில் வெளிவரவில்லை.
சிறீலங்காவில் ஏற்பட்டிருக்கும் அன்னியச் செலவாணித் தட்டுப்பாடு புற்று நோய் போன்று நாட்டின் ஒவ்வொரு துறையாகப் பரவி முடமாக்கி வருகிறது. சமீபத்தில் மாணவர்களுக்கான தவணைப்பரீட்சைகள் பதிப்பிக்கக் காகிதங்கள் இல்லாததால் முடக்கப்பட்டது. அதையடுத்து இன்று தெ ஐலண்ட், திவயன ஆகிய பத்திரிகைகள் தம்மிடம் போதிய அளவுக்குப் பதிப்பிக்கும் காகிதங்கள் இல்லையென்ற காலணத்தால் வெளிவரவில்லை என்று அறிவித்தன.
சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் சிறீலங்கா அரசு நாட்டின் நாணயமான ரூபாவை சர்வதேச பணச்சந்தையில் சுதந்திரமாக அவிழ்த்து விட்டது. அதையடுத்து சிறீலங்கா நாணயத்தின் பெறுமதி மற்றைய நாணயங்களுக்கு எதிராக வீழ்ச்சியடைந்து வருவதால் இறக்குமதி செய்யும் பொருட்களுக்காக முன்னரை விட அதிகளவில் பணம் செலுத்தவேண்டியிருக்கிறது. அதனால் பல தனியார் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இன்று ஒரு அமெரிக்க டொலருக்கு சிறீலங்கா ரூபாய்கள் 300 ஆகியிருக்கின்றன.
இன்று வெளியாகாத அவ்விரு பத்திரிகைகளும் இனிமேல் இணையத்தளத்தில் மட்டுமே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்