தமிழே வாழி

இயல்தமிழ் நாவில் இசைத்தமிழ் பேசிடும்
அயலவர் சிலரும் அருந்தமிழ் மொழிவரே!


அள்ளிப் பருகிடும் அருமைத் தமிழை
தெள்ளுத் தமிழால் தினமும் போற்றுவரே!


இலங்கு தமிழை இன்புற்று சுவைத்திட
துலங்கு தமிழைத் தூயதெனக் காப்பாய்!


தீந்தமிழ் சொல்லால் திணைத்தமிழ் பேசிடு
பூந்தமிழ் மணக்கும் புகழ்தமிழ் ஓங்கவே!


வங்கநீர் போல வையமதில் பாயும்
தங்கத் தமிழ் தரணியில் எங்குமே!


தண்டமிழ் பாரிலே தழைத்திடும் நிலையாய்
வண்டமிழ் பரவிடும் வண்தமிழ் உலகிலே!


அயன்மொழி இருந்திடும் ஆயிரம் பாரில்
வியன்தமிழ் மண்ணில் விரைவாய் பரவுமே!


முத்துத் தமிழ் மூத்தத் தாய்மொழி
முத்தமிழ் மூன்றும் முத்தாய் விளங்குமே!


கவித்தமிழ் நாளும் கன்னல் சுவையே
புவியில் பூத்திடும்  புரட்சித் தமிழே!
தேன்தமிழ் கானமும் தெவிட்டிடும் கீதமும்
வான்புகழ் உயரும் வையமதில் நாளுமே!

நற்றமிழ் மொழியை நவின்றே துய்க்க
பொற்றமிழ் தமிழே பூவாய் மணப்பாய்!
மங்கலத் தமிழை மாண்பாய் வணங்கி
மங்காத் தமிழென மகிழ்வாய் புகல்வரே!


இளந்தமிழ் என்றும் இறவாத் தமிழே
வளரும் தமிழே வையமதில் வாழ்வாய்!
அன்புடன் சொல்வோம் அழகுத் தமிழென
பண்புடன் சொல்வோம் பைந்தமிழ் என்றே!


என்றும் சொல்வோம் இன்தமிழ் தமிழென
நன்றே சொல்வோம் நயமுடன் நாளுமே!

எழுதுவது : எஸ். ரேவதி ஜீவநாதன்,
செகாம்புட். மலேசியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *