கொல்லப்பட்ட இந்தியப் பத்திரிகையாளரின் குடும்பத்தினர் தலிபான்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன் இழுக்கிறார்கள்.
ரோய்ட்டர் நிறுவனத்தில் பணியாற்றிவந்த இந்தியப் பத்திரிகையாளர் டனிஷ் சித்தீக்கி கடந்த வருடம் ஆப்கானிஸ்தானில் தனது பணியிருக்கும்போது கொல்லப்பட்டார். அவரது குடும்பத்தினர் சித்தீக்கி தலிபான்களால் பிடிக்கப்பட்டுச் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டதற்கு ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.
கந்தகார் பிராந்தியத்தின் ஸ்பின் போல்டாக் பகுதியில் பணியிலிருந்தபோது கடந்த வருடம் சித்தீக்கி கொல்லப்பட்டார். செதீக் கர்ஸய் என்ற ஆப்கானிய இராணுவ வீரரும் அதே சமயத்தில் கொல்லப்பட்டார். அக்கொலைகள் பற்றிய பல விசாரணைகளின்படி அவ்விருவரும் சித்திரவதைக்குப் பின்னால் கொல்லப்பட்டதன்றி அவர்களின் உடல்கள் துண்டாக்கப்பட்டு பொதுமக்கள் முன்னிலையில் பாரமான வாகனங்கள் அவ்வுடல் மீது ஏற்றப்பட்டதற்கும் சாட்சிகள் இருப்பதாக வழக்கைப் பதிவு செய்திருக்கும் வழக்கறிஞர் அவி சிங் குறிப்பிடுகிறார்.
பதியப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளில் ஏழு பேர் குற்றவாளிகளாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள். உள்ளூர் தலிபான் தலைவர்கள், தலிபான்களின் அதிமுக்கிய தலைவர் அகுந்த்ஸாடா, உப பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரும் அவர்களில் அடங்குவர்.
பதியப்பட்டு வழக்குப் பற்றித் தலிபான்கள் எவ்வித கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை. கடந்த வருடம் அவர்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் அவர்களின் பிரதிநிதி ஸபையுல்லா முஜாகித் தமக்கு சித்தீக்கி எப்படிக் கொல்லப்பட்டார் என்பது பற்றித் தெரியாது என்று
குறிப்பிட்டிருந்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்