ஆப்கானிஸ்தான் வடக்கில் கிளர்ச்சி. மூன்று மாகாணங்கள் கைப்பற்றப்பட்டன.

2021 இல் தலிபான் இயக்கத்தினர் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றி ஆள ஆரம்பித்த பின்னர் முதல் தடவையாக பஞ்சீர் பள்ளத்தாக்கிலிருந்து கிளர்ச்சிகள் எழுந்திருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. அஹமத் ஷா மசூத் என்ற மறைந்துபோன முன்னாள் இராணுவத் தலைவனின் மகனின் தலைமையில் நடக்கும் அந்த ஆயுதப் போரில் தலிபான்கள் மூன்று மாகாணங்களில் கட்டுப்பாட்டை இழந்ததாக அந்த இயக்கத்தினரின் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

அஹ்மத் மசூத் என்ற அந்த இராணுவத் தலைவனின் செய்திகள் பொய்யானவை என்றும் ஆப்கானிஸ்தானில் எந்தவிதமான எதிர்ப்பும் தமது ஆட்சிக்கு எதிராக நடக்கவில்லை என்றும் தலிபான்கள் சார்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

“தேசிய போராளிகளின் கூட்டணி” The National Resistance Front of Afghanistan (NRF) என்ற பெயருடைய அந்த அமைப்பினர் தான் தலிபான்கள் கடந்த வருடம் ஆட்சியைப் பிடித்த சமயத்தில் எதிர்ப்பைக் காட்டியவர்களாகும்.

ஆனால், அச்சமயத்தில் அவர்களுடைய எதிர்ப்புப் போராட்டம் முறியடிக்கப்பட்டது.

பஞ்சீர் பள்ளத்தாக்குப் பிராந்தியத்துக் குடிமக்களின் விபரங்களின்படி அங்கு கடும் போர் நடந்ததாகத் தெரியவருகிறது. அதன் காரணமாகப் பலர் அங்கிருந்து வெளியேறி நாட்டின் வேறு பகுதிகளுக்குப் புலம்பெயர்ந்திருக்கிறார்கள். அப்பகுதியின் உள்ளூர் தலிபான் இராணுவத் தலவைன் ஒருவனும் அங்கே எதிர்ப்புக்கள் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறான். ஆனால், அவற்றால் தமக்கு எவ்வித இழப்புக்களும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிடுகிறான்.

1980 களில் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியிருந்த சோவியத் இராணுவத்துக்கு எதிராகவும், 1990 இல் தலிபான்களின் அன்றைய ஆட்சிக்கு எதிராகவும் பஞ்சீர் பள்ளத்தாக்கிலேயே எதிர்ப்புக்கள் ஆரம்பித்திருந்தன. அச்சமயங்களில் அதற்குத் தலைமை தாங்கிய அஹ்மத் ஷா மசூத் “பஞ்சீர் சிங்கம்” என்று குறிப்பிடப்படுகிறார். செப்டம்பர் 11 இல் அமெரிக்காவுக்கு எதிரான தாக்குதல்கள் நடக்க இரண்டு தினங்களுக்கு முன்னர் அஷ்மத் ஷா மசூத் அல் கைதா இயக்கத்தினரால் கொலை செய்யப்பட்டார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *