தலிபான்களின் தலைமையின் பிரதிநிதியை ஆப்கானிஸ்தான் ஐ.நா பிரதிநிதி சந்தித்துப் பேசினார்.

ஆப்கானிஸ்தானில் ஐ.நா-வின் செயற்பாடுகளுக்கான நிர்வாகி மார்க்கஸ் பொட்ஸல் தலிபான்களின் அரசின் பிரதிநிதியான மௌலவி அப்துல் சலாம் ஹானபியை காபுலில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த மாதக் கடைசியில் தலிபான்கள் தமது நாட்டுப் பெண்களுக்கு உயர்கல்வியைத் தடைசெய்து, மக்களுக்கான பொதுச்சேவை நிறுவனங்களிலும் பெண்கள் பணியாற்றலாகாது என்று அறிவித்திருந்தார்கள். அதன் விளைவுகள் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மிகவும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று பொட்ஸல் சுட்டிக் காட்டினார்.

“‘பெண்களின் கல்வியைத் தடைசெய்தல், பெண்களைச் சேவை அமைப்புகளில் பணி செய்யத் தடை விதித்தல் ஆகியவை சர்வதேச அமைப்புகளின் உதவிகளில் தங்கியிருக்கும் மில்லியன் கணக்கான ஆப்கானிஸ்தானிகளுக்குப் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். விளைவாக மில்லியனுக்கும் அதிகமானோர் இறப்புக்கும் காரணமாக அமையும்,” என்று ஐ.நா-வின் பிரதிநிதி தெரிவித்தார்.

பெண்கள் சேவை நிறுவனங்களில் பணியாற்றலாகாது என்ற முடிவைத் தலிபான்கள் அறிவித்த அடுத்த நாளே பெரும்பாலான சர்வதேச உதவி அமைப்புக்கள் ஆப்கானில் இயங்குவதை நிறுத்தின. தலிபான்களின் அந்த முடிவுகளை ஏற்கத் தயாராக சர்வதேச மனிதாபிமான அமைப்புகளோ, ஐ.நா-வோ தயாராக இல்லை என்று பொட்ஸல் தலிபான்களுக்குத் தெரிவித்தார். 

தலிபான்கள் மீதான முடக்கங்களும் அவர்களின் அரசுக்கு வெளிநாடுகளிலிருக்கும் வங்கிக் கணக்குகளைப் பாவிக்க முடியாமல் தடை செய்ததும் ஏற்கனவே  நாட்டின் சகல துறைகளையும், பொருளாதாரத்தையும் பாதித்திருக்கிறது. சீர்குலைந்திருக்கும் ஆப்கானிஸ்தானின் மக்களில் பெரும்பாலானோர் பெரும்பாலான தமது தேவைகளுக்குச் சர்வதேச உதவியிலேயே தங்கியிருந்தார்கள். தலிபான்களின் சமீபகால முடிவானது சுமார் 86 % வெளிநாட்டு மனிதாபிமான அமைப்புகளைத் தமது சேவைகளை நிறுத்தக் காரணமாகியிருக்கிறது.

சாள்ஸ் ஜெ.போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *