டொங்கா தீவுகளுக்கு அத்தியாவசிய உதவிகளைக் கொண்டு சென்ற விமானங்கள் இறங்க முடியவில்லை.

சனியன்று பசுபிக் கடலிலிருக்கும் டொங்கா தீவுகளுக்கு அருகே ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் விளைவுகள் கணிக்கப்பட்டதை விட மிக மோசமாக இருக்கலாம் என்று ஐ.நா- குறிப்பிடுகிறது. வெளியுலகுடனான தொடர்புகளை டொங்கா தீவுகள் இழந்திருக்கும் நிலைமையில் நியூசிலாந்திலிருந்து அத்தீவுகளுக்கான அவசர தேவைகளுக்கான உதவிகளுடன் சென்ற விமானங்கள் தரையிறங்க முடியாமல் எரிமலையின் சாம்பலும், புகைமண்டலமும் தடுத்துவிட்டன.

தலைநகரான நுக்கா அலோபாவைத் தாக்கிய சுனாமி அலைகளின் உயரம் சுமார் ஒன்பது மீற்றரளவில் இருந்தன என்று டொங்காவின் கடற்படையினரிடமிருந்து வந்த விபரங்களிலிருந்து தெரிகிறது. இதுவரை வந்த செய்திகளின்படி இரண்டு பேர் இறந்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால், அத்தொகை அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

டொங்கா தீவுகளின் எண்ணிக்கை 172. அவை சுமார் 700,000 சதுர கி.மீ பரப்பளவில் வெவ்வேறு தூரத்தில் இருக்கின்றன. சில தீவுகள் தலைநகரிலிருந்து மிகத் தூரத்தில் இருக்கின்றன. எரிமலையின் வெடிப்பு தென்னமெரிக்காவின் பெருவரை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. நியூசிலாந்தினால் அவதானிக்கப்பட்ட சில தீவுகளில் சுனாமி அலைகளின் தாக்குதல் மிக மோசமாக இருந்தது என்றும் சிறு தீவுகள் சிலவற்றில் வாழ்ந்தவர்கள் அனைவருமே அலைகளால் அள்ளிக்கொண்டு போகப்பட்டிருக்கலாம் என்று எண்ணப்படுகிறது.

அத்தியாவசியப் பொருட்களுடன் சென்ற விமானங்கள் தரையிறங்க முடியாமல் போனதால், ஆஸ்ரேலியாவும், நியுசிலாந்தும் கடல் வழியாக அப்பொருட்களுடன் டொங்காவை அணுகவிருப்பதாகத் தெரிவிக்கின்றன. ஆனால், அக்கப்பல்கள் அந்தத் தீவுகளை நெருங்கி உதவிப் பொருட்களைத் தரையிறக்கப் பல நாட்களாகலாம் என்று அஞ்சப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்