பள்ளிவாசல் ஒலிபெருக்கிகள், நடவடிக்கைகளுக்குக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியது சவூதி அரேபியா.
சவூதி அரேபியாவின் பள்ளிவாசல்களிலிருந்து வெளிநோக்கி ஒலிக்கும் ஒலிபெருக்கிகள் இஸ்லாமியத் தொழுகையை [அதான்] அறிவிப்பதாகவும், அதற்குத் தயார்படுத்துவதை [இக்காமா] அறிவிப்பதாகவும் மட்டுமே இருக்கவேண்டும் என்று கட்டுப்பாட்டை அறிவித்திருக்கிறது. அத்துடன் வெளிவரும் சத்தமும் ஒலிபெருக்கிக் கட்டுப்பாட்டு அமைப்பின் [amplifier] மூன்றிலொரு பகுதியாக மட்டும் இருக்கவேண்டும் என்றும் சுட்டிக் காட்டியிருக்கிறது.
சவூதி அரேபியாவின் இஸ்லாமியத்துறை அமைச்சால் கடந்த வாரமே வரவிருக்கும் ரமழான் காலத்துக்குரிய வழிப்பாட்டுக் கட்டுப்பாடுகள் பற்றிச் சில வரையறைகள் விதிக்கப்பட்டன.
ரமழான் காலத்தில் பள்ளிவாசலுக்குள் நடக்கும் நிகழ்ச்சிகள் எவையும் எந்த ஒரு ஊடகத்திலும் நேரடியாக ஒளிபரப்பப்படலாகாது.
பள்ளிவாசலுக்குள் கமராக்கள் நுழையலாகாது. வழிபாடுகள், போதனைகள் செய்யும் இமாம்களைப் படமெடுத்தலாகாது.
ரமழான் நோன்புக்காலத்தில் பள்ளிவாசல்களில் “இப்தார் தானம்” செய்பவர்கள் அதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும். அரசாங்கத்துக்குச் சம்பந்தமில்லாத உதவி நிறுவனங்கள் தானம் கொடுப்பதானால் பள்ளிவாசல் அதிகாரத்துடன் கலந்தாலோசித்தே அதைச் செய்யலாம்.
இப்தார் தானம் வழங்கி முடிந்தவுடன் அந்த இடங்கள் முழுமையாகத் துப்பரவு செய்யப்படவேண்டும்.
தனியார் தமது இப்தார் தான நிகழ்ச்சிகளில் இஸ்லாமியத்துறை அமைச்சால் வகுக்கப்படும் ஒழுங்குகள் கடைப்பிடிக்கப்படவேண்டும். ஆடம்பரம், உணவை வீணாக்குதல் ஆகியவை இல்லாமல் அவை செய்யப்படவேண்டும்.
இப்தார் தானத்துக்காகக் கண்ட இடங்களிலும் பணம் சேர்ப்பது தடை செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட இடங்களில் மட்டும், அதற்கான பள்ளிவாசல் அதிகாரத்துடன் சேர்ந்து உதவித்தொகையைச் சேர்க்கலாம்.
இப்தார் தான உணவுக்குத் தேவையான பொருட்கள் இஸ்லாமியத்துறையும், நகரசபைகளும் சுட்டிக்காட்டும் நிறுவனங்களில் மட்டுமே கொள்வனவு செய்யப்படவேண்டும்.
சாள்ஸ் ஜெ. போமன்