அராபிய வெளிவிவகார அமைச்சர்கள் நால்வர் இஸ்ராயேலில் சந்தித்து அரசியலில் நெருங்கினார்கள்.
அமெரிக்க வெளிவிவகார அமைச்சரின் வளைகுடா நாடுகள், வட ஆபிரிக்கச் சுற்றுப்பயணத்தின் மூலம் அமெரிக்கா பல பலன்களை எதிர்பார்க்கிறது. ஜெனிவாவில் நடந்துவரும் ஈரானின் அணுசக்தி ஆராய்ச்சி ஒப்பந்தமும் அதில் முக்கிய பங்கை வகிக்கிறது. இஸ்ராயேலுக்கும், வளைகுடா நாடுகளுக்கும் தொடர்ந்தும் அதிருப்தியை ஏற்படுத்தி வரும் அந்த ஒப்பந்தத்தின் விளைவு ஆபிரகாம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட நாடுகளின் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்காது என்பதை விளங்கவும், நம்பவும் அண்டனி பிளிங்கனின் முக்கிய குறிக்கோள் ஆகும்.
எகிப்து, எமிரேட்ஸ், மொரோக்கோ, பஹ்ரேன் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இஸ்ராயேலில் ஒன்றாகச் சந்தித்தது இதுவே முதல் தடவை என்பதால் அச்சந்திப்பு சரித்துவ முக்கியத்துவம் வாய்ந்ததாகியது. இஸ்ராயேலின் தந்தை எனப்படும் டேவிட் பென் குரியான் கல்லறை இருக்குமிடத்தில் அந்த மாநாடு நடந்தது. அராபிய நாடுகளின் அமைச்சர்களுடன் இஸ்ராயேல், அமெரிக்கா நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும் அங்கே சந்தித்து ஈரான் அப்பிராந்தியத்தில் அதீத பலம் பெறாதிருக்க எடுக்கவேண்டிய திட்டங்கள் பற்றி விவாதித்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
1979 முதல் இஸ்ராயேலுடன் சமாதானம் செய்துகொண்டிருக்கும் எகிப்தின் வெளிவிவகார அமைச்சர் அந்த மாநாட்டில் பங்குபற்றியது பிரத்தியேக கவனத்துக்குரியது என்கிறார்கள் அரசியல் அவதானிகள். இதுவரை காலம் ஒரு எட்டுத் தள்ளியே இஸ்ராயேலுடன் நடந்து வந்த எகிப்து நெருங்கிய உறவை ஏற்படுத்திக்கொள்ளத் தயாராகியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
இஸ்ராயேலுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கும் மேலுமொரு நாடான ஜோர்டான் சார்பில் மாநாட்டில் எவரும் கலந்துகொள்ளவில்லை. அதே சமயத்தில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸிடம் ரமல்லா நகருக்கு விஜயம் செய்தார் ஜோர்டானிய மன்னர் அப்துல்லா.
“மத்திய கிழக்குப் பிராந்தியம் தொடர்ந்தும் பாதுகாப்பு அற்றதாகவே இருக்கிறது. அதைச் சமாதானமான பூமியாக்க வேண்டுமானால் பாலஸ்தீனர்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வை உண்டாக்கவேண்டும்,” என்று ரமல்லாவில் குறிப்பிட்டார் மன்னர் அப்துல்லா.
அதை உறுதிப்படுத்துவது போல மாநாடு நடந்த அதே வாரத்தில் இஸ்ராயேலின் இரண்டு நகரங்களில் தற்கொலைத் தாக்குதல்கள் நடந்து எட்டுப் பேர் இறந்தார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்