ஆபிரிக்கக் கோப்பையை வென்ற செனகல் எகித்து அணியை வென்று கத்தாரில் விளையாடத் தயாராகியது.

சுமார் ஆறு வாரங்களுக்கு முன்னர் கமரூனில் நடந்த உதைபந்தாட்டத்துக்கான ஆபிரிக்கக் கோப்பை மோதல்களில் சரித்திரத்தில் முதல் தடவையாகக் கைப்பற்றியது செனகல். அதன் இரண்டாம் பாகம் என்று குறிப்பிடத்தக்கதான மோதல் செவ்வாயன்று செனகலின் டக்கார் நகரில் நடந்தேறியது. இந்த மோதல் மூலம் எகிப்தை வரவிருக்கும் உலகக் கோப்பைக்கான உதைபந்தாட்டக் கோப்பை மோதல்களில் பங்கெடுக்க முடியாமல் செய்தது செனகல். 

உதைபந்தாட்டத்துக்கான ஆபிரிக்க வெற்றிக் கோப்பையை முதல் தடவையாகத் தனதாக்கியது செனகல். – வெற்றிநடை (vetrinadai.com)

உதைபந்தாட்டத்தில் ஆபிரிக்க நாடுகளில் முதன்மையானதாகக் கருதப்பட்டு வரும் எகிப்து மட்டுமன்றி அக்குழுவில் விளையாடும் முஹம்மது சலாவும் நிச்சயம் இம்முறை செனகலை வெல்வார்கள் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. அத்துடன் இந்த மோதல் கத்தாரில் நடக்கவிருக்கும் உலகக் கோப்பைப் பந்தயங்களுக்கும் நுழைவுச்சீட்டைக் கொடுக்கும் என்பதால் எகிப்து அதை வென்றே ஆகவேண்டுமென்று அந்த நாட்டு விசிறிகள் எதிர்பார்த்தார்கள்.

விளைவோ செனகல் மூன்றாவது தடவையாக உலகக் கோப்பைப் பந்தயங்களுக்குள் நுழைந்தது. அதன் மூலம் எகிப்தைப் போலவே செனகலும் சமமான தடவைகள் உலகக் கோப்பைப் பந்தயங்களை விளையாடத் தயாரானது. செனகல் அடுத்தடுத்து இரண்டு தடவைகள் உலகக் கோப்பை மோதல்களில் பங்குகொள்ளவிருக்கிறது.

செனகலில் நடந்த மோதலுக்கு வந்திருந்த எகிப்திய விளையாட்டு வீரர்களை செனகலில் அவமதித்ததாக எகிப்திய விசிறிகள் அமைப்பு குற்றஞ்சாட்டியிருக்கிறது. எகிப்திய வீரர்கள் பயணித்த பேருந்தைத் தாக்கியும் அவர்களை நோக்கிக் கற்களை எறிந்தமையும் படங்களாக எடுக்கப்பட்டுச் சமூகவலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் பரவியிருக்கின்றன.

விளையாட்டின் நேரத்துக்குள் இரண்டு அணிகளில் எதுவுமே வெற்றியடுக்கவில்லை என்பதால் தனித்தனியே வீரர்கள் எதிரணியின் வலைக்குள் பந்தை உதைப்பதன் மூலமே செனகல் வெற்றி பெற்றது. அச்சமயத்தின் போது செனகல் நாட்டு விசிறிகள் வேண்டுமென்றே முஹம்மது சலாவின் முகத்தையும், கண்ணையும் லேசர் கதிர்களால் குறிவைத்தார்கள் என்பதும் படங்களாகப் பரவிவருகின்றன.

செனகலைத் தவிர ஆபிரிக்காவிலிருந்து கானாவும் உலகக் கோப்பைப் போட்டிகளுக்கு விளையாடச் சித்தியடைந்தது. நைஜீரியாவில் நடந்த அந்த மோதலின் போது அது நடந்த அபுஜா நகரின் பொதுப்பணியாளர்களுக்கு அரை நாள் விடுமுறையும், இலவச போக்குவரத்து வசதியும் கொடுத்து அவர்களை விளையாட்டு மைதானத்துக்குச் சென்று உற்சாகப்படுத்த உதவியது அரசு. ஆயினும் கானாவுக்கே உலகக் கோப்பை விளையாட்டுகளுக்கான நுழைவுச்சீட்டு கிட்டியது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *