“கணவன் இரண்டாம் தரம் திருமணம் செய்ததற்காக விவாகரத்துக் கோரும் பெண்கள், நரகத்தில் வேகுவார்கள்!”

எகிப்தின் மிகப் பிரபலமான விளையாட்டுத்துறைப் பிரபலமானவர்களில் ஒருவர் உடற்கட்டுப் போட்டியாளர்- ஆணழகன் மம்டூ எல்ஸ்பியாய். கடந்த இரண்டு வருடங்களாக மிஸ்டர்.ஒலிம்பியா பட்டத்தை வைத்திருக்கும் அவர் செல்லமாக பிக் ராமி என்று அழைக்கப்படுகிறார். முதல் மனைவியின் அனுமதியின்றி அவர் இரண்டாவது தடவை திருமணம் செய்துகொண்டதால் முஸ்லீம்களின் திருமணம் – மனைவியர் பற்றிய சர்ச்சை எகிப்தில் வெடித்தெழுந்திருக்கிறது.

முதலாவது மனைவி மார்வாவுக்குத் தெரியாமல் அலெக்ஸாந்திரியாவில் இரகசியமாகத் திருமணம் செய்துகொண்டு பிக் ராமி டுபாய்க்குத் தேனிலவுக்குச் சென்ற விடயம் பத்திரிகையாளர்கள் மூலமாகவே வெளியாகியது. மார்வாவுக்கும், பிக் ராமிக்கும் மூன்று மகள்மார் உண்டு. பத்திரிகையாளரொருவர் மார்வாவிடம் தொடர்புகொண்டு அபிப்பிராயம் கேட்டதாலேயே அவருக்கு அது தெரியவந்தது. தனது கணவனின் வெற்றிகளுக்குப் பின்னால் உழைத்தவர் மார்வா என்பது பிரபலமான விடயமென்பதால் இஸ்லாத்தில் திருமணச் சட்டம் என்ன சொல்கிறதென்பது எகிப்தில் விவாதமேடைகளில் ஒலிக்கிறது.

ஒரு கணவன் மற்றைய மனைவியரின் சம்மதத்துடன் நாலு மனைவியரைக் கொண்டிருக்கலாமென்று குரான் கூறுகிறது. அதேசமயம் அவன் நால்வரையும் சரிசமமாக, ஏற்றத்தாழ்வின்றி நடத்தவேண்டுமென்கிறது.

எகிப்தின் இஸ்லாமிய உயர்பீடத்தின் தலைவர் இமாம் அல் அஸார் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்துகொள்வதைப் பகிரங்கமாகக் கண்டிப்பவராகும். அப்படி ஆண்கள் செய்யும்போது 90 % விகிதமான பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். அது குரானின் கோட்பாட்டுக்கு முரண்பட்டதாகும் என்கிறார் அவர். எனவே ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்துகொள்ளும் ஆண்கள் செயல் ஹராம் என்கிறார் அவர்.

தொலைக்காட்சியில் இஸ்லாம் போதிக்கும் பலரோ பிக் ராமியின் ஆதரவாளர்களாக அவரது இரண்டாவது திருமணத்தைச் சரியென்று வாதித்து வருகிறார்கள். சமூகவலைத்தளங்களில் அவர்களுடைய வீடியோக்கள் பல பரவுகின்றன. “தனது கணவன் இரண்டாம் தரம் திருமணம் செய்ததற்காக விவாகரத்துக் கோரும் பெண்கள், நரகத்தில் வேகுவார்கள்,” என்கிறார்கள் அவர்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்