தற்காலத்தில் குருகுலம்..!
உண்டு உறைவிடப் பள்ளிகள் தேவை. முன்னொரு காலத்தில் நமது நாட்டில் ஒவ்வொரு சிற்றூரிலும் உண்டு உறைவிடப் பள்ளிகள் ( குருகுலக்கல்வி)கூடுதலாக இருந்துள்ளன. காலப்போக்கில் அவைகள் அகற்றப்பட்டு மாணவர்கள் தங்கள் இல்லத்திலிருந்து கல்விக்கூடங்களுக்கு சென்று கல்வி பயிலும் முறை நடைமுறையில் உள்ளது. இம்முறை மாணவர்களுக்கு கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை அளித்து அவர்களை தவறான பாதைக்கு இட்டுச் செல்கிறது.
இன்றைய சூழலில் தனிக் குடும்பங்கள் கூடுதலாக பெருகிவிட்டதால் ஒரு இல்லத்தில் உள்ள தலைவன் ,தலைவி இருவருமே பணிக்கு சென்றால்தான் குடும்பத்தை நடத்த முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது.
இதனால் அவர்கள் தங்கள் பிள்ளைகளை கவனிக்க இயலாத சூழல் உருவாகியுள்ளது. அது மட்டுமல்லாமல் இன்றைய கல்விமுறை வெறும் எட்டுச் சுரைக்காயாகவே உள்ளது. இக்கல்வி முறை மாணவர்களை உழைக்க கற்றுக் கொடுப்பதில்லை.
மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்காணிப்பு மற்றும் கண்டிப்பு இல்லாததால் அவர்கள் மனம் போன போக்கில் சென்று தீய பழக்க வழக்கங்களுக்கு ஆட்பட்டு விடுகின்றனர். இது கட்டாயம் தடுக்கப்பட வேண்டும். இவ்விடயத்தில் அரசும் பொதுமக்களும் அக்கறை காட்ட வேண்டும். முன்னொரு காலத்தில் இருந்தது போல் அனைத்து குழந்தைகளும் 10 வயதுவரை பெற்றோர் வளர்ப்பிலும் 10 வயது முதல் 21 வயது வரை உண்டு உறைவிடப் பள்ளிகளில் கட்டாயம் தங்கி படிப்பு மற்றும் தொழில்களை கற்றுக் கொள்ளும்படி அரசால் சட்டம் இயற்றப்பட வேண்டும்.
அப்போதுதான் நமது நாட்டில் நல்ல குடிமக்களை உருவாக்க முடியும். எனவே இன்றைய காலச்சூழலில் ஒவ்வொரு சிற்றூரிலும் உண்டு உறைவிட பள்ளிகள் உருவாக்கப்பட்டு மாணவர்கள் 10 வயது முதல் 21 வயது வரை அங்கு தங்கி கல்வி மற்றும் தொழில்களை கற்றுக் கொள்ள கட்டாய சட்டம் இயற்றுவது அவசியமாகிறது. வாய்ப்புக்கு நன்றி ஐயா வே .முருகேசன் கரூர்